Published : 17 Nov 2023 04:48 PM
Last Updated : 17 Nov 2023 04:48 PM

பிற்பகல் 3 மணி நிலவரம் | ம.பி.யில் 60.52%, சத்தீஸ்கரில் 55.31% வாக்குகள் பதிவு

புதுடெல்லி: பிற்பகல் 3 மணி நிலவரப்படி, மத்தியப் பிரதேசத்தில் 60.52% வாக்குகளும், சத்தீஸ்கரில் 55.31% வாக்குகளும் பதிவாகி உள்ளன. மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், கடந்த 7-ம் தேதி 20 தொகுதிகளுக்கு முதற்கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளதால், இன்றைய இரண்டாம் கட்டத் தேர்தலில் 70 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

மத்தியப் பிரதேச தேர்தல்: மத்தியப் பிரதேசத்தில் தற்போது முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு கடும் போட்டியாளராக காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத் நிறுத்தப்பட்டுள்ளார். மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 2,500க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு 2.87 கோடி ஆண் வாக்காளர்கள், 2.71 கோடி பெண் வாக்காளர்கள் என மொத்தம் 5.59 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

42 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு மையங்கள் பெண்களாலும், 183 வாக்குப்பதிவு மையங்கள் மாற்றுத் திறனாளிகளாலும் நடத்தப்படுகின்றன. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 700 கம்பெனிகளும், 2 லட்சம் மாநில காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குகள் பதிவு செய்யப்படும் என்ற போதிலும், பாலாகட், மாண்ட்லா, திண்டோரி மாவட்டங்களில் உள்ள சில வாக்குப்பதிவு மையங்களில் மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு முடித்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.52% வாக்குகள் பதிவாகி உள்ளன.

சத்தீஸ்கர் தேர்தல்: சத்தீஸ்கரில் இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 18,800-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு காலை 8 மணி முதல் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், பிந்த்ராநவகர் தொகுதிக்கு உட்பட்ட 9 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கே வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 3 மணி வரை வாக்குகள் பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 958 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சத்தீஸ்கரில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 55.31% வாக்குகள் பதிவாகி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x