Published : 17 Nov 2023 02:55 PM
Last Updated : 17 Nov 2023 02:55 PM
போபால்: மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், “மக்களின் தேர்வு சரியாக இருக்கும். பொதுமக்கள் உண்மையின் பக்கம் இருப்பார்கள் என்று நம்புகிறேன்” என காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார். மேலும், “வாக்காளர்களுக்கு மது, பணம் விநியோகிக்கப்படுகிறது” என்று பாஜக மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவருமான கமல்நாத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “பாஜகவிடம் இருந்து இந்த மாநிலத்தை மிகப் பழைமையான கட்சி (காங்கிரஸ்) கைப்பற்றும். மக்களின் தேர்வு சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். பொதுமக்கள் உண்மையின் பக்கம் இருப்பார்கள் என்று நம்புகிறேன். நான் சிவராஜ் சிங் சவுகான் அல்ல... எனவே, எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்பதை என்னால் இப்போது கூறமுடியாது. அதை மக்கள் முடிவெடுப்பதற்காக விட்டுவிடுகிறேன். இன்னும் சில மணி நேரங்களுக்கு போலீஸ், பணம் மற்றும் நிர்வாகம் ஆகியவை பாஜக வசம்தான் இருக்கும். நேற்று, எனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்தன, மேலும் வாக்காளர்களை கவரும் வகையில் மதுபானம் மற்றும் பணம் விநியோகிக்கப்படுவதைக் காட்டும் வீடியோ காட்சியும் வந்துள்ளது” என்றார்.
மத்தியப் பிரதேச தேர்தல்: 2003-ஆம் ஆண்டு முதல் (கமல்நாத் தலைமையிலான ஒன்றரை ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி நீங்கலாக) இதுவரை பாஜகதான் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கிறது. 2018 தேர்தலைப் போலவே இந்த முறையும் பாஜக ஆட்சி மீது நிறையவே அதிருப்தி நிலவுவதாக கள நிலவரங்கள் சொல்கின்றன. மத்தியப் பிரதேசத்தில் தற்போது முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு கடும் போட்டியாளராக காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத் நிறுத்தப்பட்டுள்ளார். மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 2,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு 2.87 கோடி ஆண் வாக்காளர்கள், 2.71 கோடி பெண் வாக்காளர்கள் என மொத்தம் 5.59 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
42 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு மையங்கள் பெண்களாலும், 183 வாக்குப்பதிவு மையங்கள் மாற்றுத் திறனாளிகளாலும் நடத்தப்படுகின்றன. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 700 கம்பெனிகளும், 2 லட்சம் மாநில காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குகள் பதிவு செய்யப்படும் என்ற போதிலும், பாலாகட், மாண்ட்லா, திண்டோரி மாவட்டங்களில் உள்ள சில வாக்குப்பதிவு மையங்களில் மாலை 3 மணியுடன் வாக்குப்பதிவு முடித்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் முற்பகல் 11 மணி நிலவரப்படி 27.79% வாக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT