Published : 17 Nov 2023 05:37 AM
Last Updated : 17 Nov 2023 05:37 AM
புதுடெல்லி: பத்து லட்சம் மக்கள் தொகைக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற திட்டம் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் இளங்கலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) இடங்களின் எண்ணிக்கை, அந்த மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டும். அதாவது 10 லட்சம் மக்கள் தொகைக்கு100 எம்பிபிஎஸ் இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஆகஸ்டில் அறிவித்தது. இந்த திட்டத்தால் தென்னிந்திய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
தமிழகத்தில் தற்போது 11,225 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. தேசிய மருத்துவ ஆணையத்தின் வரையறையின்படி தமிழகத்தில் 7,686 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற நிலை உருவானது.
தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் நிலை உருவானது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய திட்டத்துக்கு தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன்காரணமாக 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற திட்டம் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “பத்து லட்சம் மக்கள் தொகைக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டது. எனவே புதிய வரையறை வரும் 2025-26-ம்ஆண்டில் இருந்து அமலுக்கு வரும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT