Published : 17 Nov 2023 04:47 AM
Last Updated : 17 Nov 2023 04:47 AM
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் 70 தொகுதிகளில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 5.6 கோடிவாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2.88 கோடி பேர் ஆண்கள். 2.72 கோடி பேர் பெண்கள். இந்த தேர்தலில் 22.36 லட்சம் இளைஞர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
தலைநகர் போபாலில் உள்ள 7 தொகுதிகளில் மட்டும் 2,049 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 4 தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று பதிவாகும் வாக்குகள் டிச.3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மத்திய பிரதேசத்தில் பாஜக - காங்கிஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 110 இடங்களையும், காங்கிரஸ் 109 இடங்களையும் கைப்பற்றியது. இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க,முதல்வர் சிவராஜ் சவுகான் தலைமையிலான பாஜக அரசு தீவிர முயற்சி எடுத்துள்ளது.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங்,பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் இங்கு காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அதேபோல, மத்திய பிரதேசத்தில் சுமார் 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கமல்நாத், பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும், ஓபிசி பிரிவினரின் நலன் காக்கப்படும் என இவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
சத்தீஸ்கரில் 2-ம் கட்ட தேர்தல்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 7-ம் தேதி, நக்சல் பாதிப்பு உள்ள 20 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் 78 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், இதர 70 தொகுதிகளுக்கு இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் பிலாஸ்பூர் மண்டலத்தில் 25 தொகுதிகள் உள்ளன. இங்கிருந்து சுமார் 3-ல்ஒரு பங்கு எம்எல்ஏக்கள் தேர்வுசெய்யப்படுவதால், பிலாஸ்பூர்மண்டலம் பாஜக, காங்கிரஸுக்குமிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த முறை, இப்பகுதியின் முடிவுகள்தான் வெற்றியை தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.
இங்கு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 7 இடங்களையும், காங்கிரஸ் 12 இடங்களையும் கைப்பற்றியிருந்தது. இதனால் இப்பகுதியில் இரு கட்சிகளும் தீவிரம் கவனம் செலுத்தியுள்ளன.
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரியங்கா ஆகியோர் இங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிலாஸ்பூர் மண்டலம் விவசாய நிலங்கள் அதிகம் உள்ள பகுதி. அதனால் சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும், நெல் குவின்டால் ஒன்றுக்கு ரூ.3,200-க்கு கொள்முதல் செய்யப்படும் எனவும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. பாஜக, காங்கிரஸ் தவிர ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சியும் சத்தீஸ்கரில் போட்டியிடுகின்றன.
சத்தீஸ்கரில் 75 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் உள்ளது. கடந்த 2003 முதல் 2018வரை சத்தீஸ்கரில் ஆட்சியில் இருந்த பாஜக, ஆட்சியை மீண்டும்கைப்பற்ற தீவிர முயற்சி எடுத்துள்ளது. சத்தீஸ்கரில் 22 மாவட்டங்களில் உள்ள 70 தொகுதிகளில் இன்று நடக்கும் 2-ம் கட்டதேர்தலில் 958 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT