Published : 17 Nov 2023 06:49 AM
Last Updated : 17 Nov 2023 06:49 AM

தெலங்கானா சட்டப்பேரவைக்கு 30-ம் தேதி தேர்தல்: 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் போட்டி

ஹைதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இங்குள்ள 119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தெலங்கானாவில் தொடர்ந்து 2-வது முறையாக பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ஆட்சி நடக்கிறது. முதல்வர் சந்திரசேகர ராவ் 3-வது முறையாக ஹாட்ரிக் சாதனை படைக்க முனைந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தெலங்கானாவில் கால் ஊன்ற தீவிரமாக முயற்சிகளை செய்து வருகிறது.

காங்கிரஸ் தரப்பில் அதன் தேசிய தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் தெலங்கானாவில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இன்றுகார்கேவும், ராகுல் காந்தியும் ஹைதராபாத்தில் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளனர். மேலும், மாலையில் குத்புலாபூர் நகராட்சி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் ராகுலும், கார்கேவும் பங்கேற்க உள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து, நாளை 18-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஹைதராபாத் வர உள்ளனர். அன்று காலை பாஜக தேர்தல் அறிக்கையை அவர்கள் வெளியிடுகின்றனர். பின்னர் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளிலும் இவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் தெலங்கானாவில் அனல் பறக்கும் சூறாவளி பிரச்சாரங்கள் தொடங்கி விட்டன.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை மாலையோடு வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகதேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததால், அதிருப்தியாளர்களை அந்தந்த கட்சியினர் சமாதானப்படுத்தி வேட்பு மனுக்களை பெருமளவில் வாபஸ் பெற வைத்தனர். இதனால் கடைசி நாளில் மட்டுமே 608 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர்.

இதனால் இறுதியாக 2,290 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். இதில் அதிகபட்சமாக தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் போட்டியிடும் கஜ்வேல் தொகுதியில், அவரை எதிர்த்து 113 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்திருந்தனர். இதில் பல சுயேச்சைகள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால், இறுதியாக சந்திரசேகர ராவை எதிர்த்து தற்போது 42 பேர் களத்தில் உள்ளனர். இதேபோன்று, சந்திரசேகர ராவ் போட்டியிடும் மற்றொரு தொகுதியான காமரெட்டி தொகுதியில் இவரை எதிர்த்து 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மேலும், எல்.பி நகர் தொகுதியில் 48 பேரும், பாலேருவில் 37 பேரும், கோதாடாவில் 34 பேரும்,கம்மம் தொகுதியில் 32 பேரும், நல்கொண்டா 31, கொத்த கூடம்தொகுதியில் 30 பேரும் என அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தெலங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகள் உள்ளன. தெலங்கானாவில் 1,58,71,493 ஆண் வாக்காளர்களும், 1,58,43,339 பெண் வாக்காளர்களும், 3-வதுபாலினத்தவர் 2,557 வாக்காளர்களும் உள்ளனர். வரும் 28-ம்தேதி மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x