Published : 16 Nov 2023 07:51 PM
Last Updated : 16 Nov 2023 07:51 PM
மும்பை: தேர்தல் நடத்தை விதிகள் குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் தங்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளதாக சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
இது குறித்து பேசிய உத்தவ் தாக்கரே, கடந்த 1987-ம் ஆண்டு பால் தாக்கரேவுக்கு நடந்த நிகழ்வு ஒன்றினைச் சுட்டிக் காட்டினார். அப்போது அவர் கூறுகையில், "அன்று ‘நாங்கள் இந்துகள் என்று சொல்வதில் பெருமை கொள்ளுங்கள்’, ‘கோயில்தான் கட்டுவோம்’ என்று கூறியதற்காக பால் தாக்கரேவின் ஓட்டுரிமை ஆறு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்றோ கர்நாடகா தேர்தலின்போது "வாக்களிக்கையில் ஜெய் பஜ்ரங்பலி எனக் கூறுங்கள்" என்று பிரதமர் மோடி கூறினார். இப்போது மத்தியப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பாஜகவுக்கு நீங்கள் வாக்களித்தால் கட்டணம் இல்லாமல் அயோத்திக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்" என்று கூறியிருக்கிறார்.
ஒருவேளை தேர்தல் ஆணையம் தன்னுடைய நிலைப்பாடை மாற்றிவிட்டதோ? பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் தெரிந்திருக்கிறது, எங்களுக்கு அது தெரியாதோ? 1987-ம் ஆண்டில் இருந்தது விதியா அல்லது இப்போது இருப்பதுதான் விதியா என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். பாஜக ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு ஃப்ரீ ஹிட் கொடுக்க முடியாது. நாங்கள் ஏதாவது செய்தால் அது ஹிட் விக்கெட் ஆக்கப்படுகிறது. நீங்கள் ராமரை இலவசமாக தரிசிக்க அனுமதிக்கிறீர்கள் என்றால், அதை மத்தியப் பிரதேசத்துக்கு மட்டும் ஏன் செய்கிறீர்கள்? எல்லா இந்துக்களுக்கும், எல்லா நேரத்திலும் இலவச தரிசனம் வழங்குங்கள். அமித் ஷாவுக்கு அவர்களின் சொந்த பலம் என்னவென்பது தெரியும். அவர்களின் வெற்றி ராமரை அடிப்படையாகக் கொண்டது" என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
புதன்கிழமை நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு உலக சாதனைகளைப் படைத்த விராட் கோலியைப் பாராட்டிய உத்தவ் தாக்கரே, "அவர் இன்னும் நிறைய சாதனைகளைப் படைக்க வேண்டும். நான் இந்திய அணியை வாழ்த்துகிறேன்” என்றார். மேலும், "அது இந்திய அணியா? அல்லது பாரதிய அணியா? நாம் இந்துஸ்தான் அணி என்று கூறுவோம்" என்றும் கேலியும் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT