Published : 16 Nov 2023 06:10 PM
Last Updated : 16 Nov 2023 06:10 PM
புனே: இந்தியா – இலங்கை இடையேயான 9-வது கூட்டு ராணுவப் பயிற்சி புனே-ல் இன்று தொடங்கியது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட தகவல்: இந்தியா – இலங்கை இடையேயான 9-வது கூட்டு ராணுவப் பயிற்சி 'மித்ரா சக்தி -2023' புனேயில் இன்று தொடங்கியது. இந்தப் பயிற்சி இனறு முதல் வரும் 29 வரை நடத்தப்படுகிறது. 120 வீரர்களைக் கொண்ட இந்தியப் படைப்பிரிவில் முக்கியமாக மராத்தா தரைப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இலங்கை தரப்பில் 53 தரைப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்திய விமானப்படையைச் சேர்ந்த 15 வீரர்களும், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 5 வீரர்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது கூட்டு எதிர்வினைகளை ஒருங்கிணைப்பது இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். தாக்குதல், தேடுதல் மற்றும் அழித்தல் போன்ற உத்தி சார்ந்த நடவடிக்கைகளை இரு தரப்பினரும் மேற்கொள்வார்கள். கூடுதலாக, ராணுவ தற்காப்பு கலைகள், துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் யோகா உடற்பயிற்சி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.
மித்ரா சக்தி - 2023 பயிற்சியில் ஹெலிகாப்டர்கள் தவிர ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி அமைப்புகள் பயன்படுத்தப்படும். ஹெலிபேட்களை பாதுகாப்பது மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது காயமடைந்தவர்களை வெளியேற்றுவது தொடர்பான ஒத்திகைகளும் இரு தரப்பினராலும் கூட்டாக ஒத்திகை செய்யப்படும்.
பங்கேற்பாளர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கற்றுக்கொள்ள உதவும் பரந்த அளவிலான போர்த் திறன்கள் குறித்த கூட்டுப் பயிற்சிகளின் கருத்துக்களையும் நடைமுறைகளையும் இரு தரப்பினரும் பரிமாறிக் கொள்வார்கள். சிறந்த நடைமுறைகளைப் பகிர்வது இந்திய ராணுவத்திற்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் நடவடிக்கையை மேலும் மேம்படுத்தும். இந்தப் பயிற்சி இரு அண்டை நாடுகளுக்கும் இடையே வலுவான இருதரப்பு உறவுகளை வளர்க்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT