Published : 16 Nov 2023 01:44 PM
Last Updated : 16 Nov 2023 01:44 PM
டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கியவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். இன்று மாலைக்குள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு - பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த மத்திய அமைச்சர் வி.கே.சிங், மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் நம்பிக்கையாக இருக்கிறோம். எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்" எனக் கூறினார். தேசிய நெடுஞ்சாலையின் சுரங்கப் பாதை திட்டத்தின் இயக்குநர் அன்ஷூ மணிஷ் குல்கோ கூறுகையில், "டெல்லியில் இருந்து கொண்டுவரப்பட்ட இயந்திரங்களைப் பொருத்தும் பணி முடிந்துவிட்டது. தற்போது மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன" எனத் தெரிவித்தார்.
தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திட்டத்தின் செய்தித் தொடர்பாளர் கிரிதாரிலால் கூறுகையில், "நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. மீட்புப் பணியில் நாங்கள் வெற்றி பெறுவோம். இயந்திரங்களை நிறுவும் பணி 99.9 சதவீதம் முடிந்துவிட்டது. யாரும் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். உள்ளே இருப்பவர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படவில்லை. எனினும்,மருத்துவக் குழுவினர் இங்கே வரவழைக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார். இதனிடையே, இன்றைக்குள் மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிடும் என்றும், அனைவரும் மீட்கப்பட்டு விடுவார்கள் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT