Published : 16 Nov 2023 01:00 PM
Last Updated : 16 Nov 2023 01:00 PM

நாங்கள் ஒன்றாக, ஒற்றுமையாக இருக்கிறோம்; பெரும்பான்மை வெற்றி பெறுவோம் - ராஜஸ்தானில் ராகுல் காந்தி உறுதி

படம்: ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம்

ஜெய்ப்பூர்: "நாங்கள் ஒன்றாக மட்டும் இல்லை, ஒற்றுமையாகவும் இருக்கிறோம்" என்று தேர்தல் பிரச்சாரத்துக்காக ராஜஸ்தான் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்துக்கு பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் முக்கிய தலைவரும் வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) ஜெய்ப்பூர் சென்றார். அப்போது அவரை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டும் ஒன்றாக இணைந்து வரவேற்றனர். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், முதல்வர் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் ராகுல் காந்திக்கு இருபுறமும் நிற்கின்றனர். அவர்கள் இருவரும் ராகுல் காந்தியை முதலில் போகச் சொல்ல, ராகுல் அவர்களை முதலில் போகச் சொல்கிறார்.

இதனைத் தொடர்ந்து முன்னே சென்ற ராகுல் காந்தி செய்தியாளர்கள் அழைப்பதைக் கண்டு திரும்பி, "நாங்கள் ஒன்றாக மட்டும் இல்லை, ஒற்றுமையாகவும் இருக்கிறோம். இருப்போம். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை வெற்றி பெரும்" என்று தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்னதாக ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் அவரது முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையில் மோதல் இருப்பதாக ஊகங்கள் நிலவி வந்தன. இந்தநிலையில், அசோக் கெலாட் தனது எக்ஸ் பக்கத்தில் அவர், சச்சின் பைலட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் கலந்துரையாடும் படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில் ;ஒற்றுமை, மீண்டும் வெற்றி பெறுவோம்' என்று குறிப்பிட்டிருந்தார். புதன்கிழமை இந்தப் பதிவு வெளியான நிலையில், ராகுல் காந்தியின் இந்த ஒற்றுமை குறித்தப் பேச்சு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

கெலாட் vs சச்சின்: அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவருக்குமான ஊடல் கடந்த 2020 ஆண்டில் தொடங்கியது. அப்போது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், 18 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் துணைமுதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதிலிருந்து கெலாட், பைலட் இடையே மோதல் போக்கு நிலவியது. அசோக் கெலாட் சச்சின் பைலட்டை துரோகி, உபயோகமற்றவர் என்று கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில் சச்சின் பைலட் இந்த ஆண்டு தொடக்கத்தில் கெலாட் அரசுக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு யாத்திரை நடத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x