Published : 16 Nov 2023 05:35 AM
Last Updated : 16 Nov 2023 05:35 AM

விவசாயிகளுக்கு 15-வது தவணையாக ரூ.18 ஆயிரம் கோடி விடுவிப்பு; பழங்குடியினருக்கு ரூ.24,000 கோடி திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கினார்

ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி நகரில் உள்ள பிர்சா முண்டா அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். படம்: பிடிஐ

குந்தி: ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம் உலிஹட்டு கிராமத்தைச் சேர்ந்தபிர்சா முண்டா சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். பழங்குடியினத்தைச் சேர்ந்த இவரது பிறந்த நாள் (நவம்பர் 15-ம் தேதி) ‘ஜன்ஜதியா கவுரவ் திவஸ்’ (பழங்குடியினர் பெருமை தினம்) என்ற பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என மத்திய அரசு கடந்த 2021-ல்அறிவித்தது. நவ. 15-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் தொடங்கப்பட்ட நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், 3-வது பழங்குடியினர் பெருமை தினத்தை முன்னிட்டு பிர்சா முண்டாவின் சொந்த ஊரான உலிஹட்டுக்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அங்கு அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதன்மூலம் பிர்சா முண்டாவின் சொந்த ஊருக்கு நேரில் சென்ற முதல் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது. பின்னர், பிர்சா முண்டா சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், விக்சிட் பாரத் சங்கல்ப் யாத்திரை மற்றும் பிரதமரின் பின்தங்கிய பழங்குடியின குழுக்கள் மேம்பாட்டு திட்டத்தை (பிவிடிஜி) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தின் கீழ் பழங்குடியினர் பகுதிகளில் சாலை, தொலைத்தொடர்பு, மின்சாரம், குடியிருப்பு, தூய்மையான குடிநீர், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படும். இதன்மூலம் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குட்பட்ட 22,544 கிராமங்களில் வசிக்கும் சுமார் 28 லட்சம் பழங்குடியினர் பயன்பெறுவர்.

இதுதவிர, ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாலை, ரயில், கல்வி, நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட துறைகளில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் சில திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் நாடு முழுவதும் உள்ள 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 15-வது தவணைத் தொகையாக ரூ.18 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி விடுவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு ஏராளமான திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. 100 சதவீதம்ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்ட முதல் மாநிலம் என்ற பெருமை ஜார்க்கண்ட் பெற்றுள்ளது. பழங்குடியின மக்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். அவர்களுக்கு மரியாதையை செலுத்துகிறேன்.

ஆனால் முந்தைய ஆட்சியாளர் கள் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை. பழங்குடியின போராளிகளுக்கு நாடு எப்போதுமே நன்றிக்கடன் பட்டுள்ளது. பெண்கள், விவசாயி கள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர-ஏழை மக்கள் ஆகியோர் நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய 4 தூண்கள் போன்றவர்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x