Published : 16 Nov 2023 06:20 AM
Last Updated : 16 Nov 2023 06:20 AM
பெராசியா: மத்திய பிரதேசம் போபால் மாவட்டத்தில் உள்ள பெராசியா சட்டப்பேரவை தொகுதியில் நேற்று நடந்த இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
நாட்டில் அரசியல் சாசனமும், ஜனநாயகமும் காங்கிரசால்தான் பாதுகாக்கப்பட்டது. நாட்டுக்காக காங்கிரஸ் கட்சி செய்தது என்ன என்று பிரதமர் கேட்கிறார்? உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற பசுமை புரட்சி, பால் உற்பத்தியை அதிகரிக்க வெண்மை புரட்சி போன்றவற்றை கொண்டு வந்தது காங்கிரஸ். நாட்டில் உள்ள பக்ரா நங்கல் அணை முன்னணி மருத்துவ மற்றும் பொறியியல் நிறுவனங்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் தொலை நோக்குகளால் உருவானவை.
நாட்டில் உள்ள மிகப் பெரியகூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான அமுல், காங்கிரஸ் ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது.
நவீன இந்தியாவின் கோயில் களாக திகழும் எய்ம்ஸ், ஐஐடிக்கள், மிகப் பெரிய அணைகள், தொழிற்சாலைகள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உருவானவை.
பிரதமர் மீது புகார்: நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி, தனது பணியை செய்யாமல், சட்டப் பேரவை தேர்தல்களுக்கு வாக்கு சேகரிக்க சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் பிரச்சாரம் செய்கிறார். பிரதமராக இருப்பவர், தெருக்களில் சுற்றுவதற்கு பதில் தனது பணியை முறையாக செய்ய வேண்டும்.
பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் அம்பேத்கர் ஆகியோரால் ஏற்பட்ட ஜனநாயகம் மற்றும் மக்களின் வாக்குரிமையால்தான் மோடியால் பிரதமராக முடிந்தது. சுதந்திரத்தின்போது பாஜக ஆட்சிக்கு வந்திருந்தால், மனு சாஸ்திரத்தை அமல்படுத்தி தெருக்கள் மற்றும் நீர்நிலைகளில் தலித்துகள் செல்லவிடாமல் தடுத்திருப்பார்கள்.
மத்திய பிரதேசத்தில் பாஜக 18 ஆண்டுகள் ஆட்சிசெய்ததால்தான் இங்கு அனைத்திலும் ஊழல் நிலவுகிறது. இந்த தேர்தலில் மக்கள் ஊழல் கட்சியை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT