Published : 15 Nov 2023 07:14 PM
Last Updated : 15 Nov 2023 07:14 PM
போபால்: மத்தியப் பிரதேசத்தை வளர்ச்சி அடையச் செய்வதற்கான தொலைநோக்குத் திட்டம் எதுவும் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றது. தலைநகர் போபாலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது: "காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியல் மற்றும் எதிர்மறை அரசியலைப் பார்த்து மத்தியப் பிரதேச மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தை வளர்ச்சி அடையச் செய்வதற்கான தொலைநோக்குத் திட்டம் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை.
மத்தியப் பிரதேசத்தின் வாக்காளர்களிடம் நான் கோரிக்கை வைக்கிறேன். பாஜகவை தேர்ந்தெடுங்கள்; தாமரைச் சின்னத்துக்கு வாக்களியுங்கள். மத்தியப் பிரதேசம் வளர்ச்சி அடைவதை நீங்கள் காண்பீர்கள். அதோடு, இந்தியாவும் வளர்ச்சி அடையும். மத்தியப் பிரதேச தேர்தல் பிரச்சாரம் இம்முறை மிகவும் சிறப்பானதாக இருந்தது. அதிக அளவில் வாக்காளர்களின் ஆசீர்வாதம் பாஜகவுக்கு இருப்பதை பார்க்க முடிந்தது. மாநிலத்தின் ஒவ்வொரு மூலைக்கும் நான் சென்றுள்ளேன். ஏராளமான மக்களிடம் பேசி உள்ளேன். பாஜக மீது அவர்கள் கொண்டுள்ள நெருக்கத்தை என்னால் உணர முடிந்தது. மக்களின் ஆசீர்வாதம்தான் பாஜகவின் மிகப் பெரிய சொத்து.
இந்தத் தேர்தலில், பெண்கள் அதிக அளவில் பாஜகவின் கொடியை தங்கள் கைகளில் ஏந்தி இருந்தனர். பாஜகவுக்கு ஆதரவு அளிக்க பெண்கள் முடிவு செய்துவிட்டனர். ஏனெனில், பெண்களின் முன்னேற்றம்தான் பாஜகவின் முன்னுரிமை. எனவே, மீண்டும் பாஜக வரவேண்டும் என்பதில் பெண்கள் உறுதியாக உள்ளனர். இதேபோல், இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை. இந்த ஆண்டுகள் இளைஞர்களுக்கானதாக இருக்க வேண்டும். இந்தியாவை வளர்ச்சி அடையச் செய்வதற்கும், அதன் பலனை பெறுவதற்கும் இந்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியம் என்பதால், நமது இளைஞர்கள் இதில் கவனமாக இருக்கிறார்கள். அவர்களின் தேர்வாக பாஜகவே உள்ளது" என்று பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT