Published : 15 Nov 2023 10:22 AM
Last Updated : 15 Nov 2023 10:22 AM

சூரத்தில் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிய 4 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி

பிரதிநிதித்துவப் படம்

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிய 4 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூரத் நகரின் பால்சனா பகுதியில் உள்ள ஒரு சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் நேற்று மாலை (செவ்வாய்) பிஹாரைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 2 தொழிலாளர்கள் தொட்டிக்கு உள்ளே இறங்கியபோது மயக்கமடைந்தனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய வெளியில் நின்றிருந்த மற்ற இரு தொழிலாளர்களும் மயங்கி தொட்டிக்கு உள்ளேயே விழுந்தனர்.

4 பேரும் தொட்டியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் 4 பேருமே ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவர்களைப் பரிசோதன செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர்கள் பிஹாரைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர நால்வரின் மற்ற அடையாளங்களையும் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த இந்த அவலம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.30 லட்சம் இழப்பீடு: கழிவுநீர் அகற்றும் பணியின்போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் இந்த நடைமுறைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுநல வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. அப்போது, கழிவுநீர் அகற்றும் பணியின்போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், கழிவுநீர் அகற்றும்போது படுகாயமடைந்து, நிரந்தர உடல் பாதிப்பு அடைந்தால் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், மேலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x