Published : 15 Nov 2023 07:15 AM
Last Updated : 15 Nov 2023 07:15 AM
புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளன. இதனை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இவ்வாறு மசோதாக்களை நீண்ட காலத்துக்கு ஆளுநர்கள் நிலுவையில் வைப்பது சரியல்ல என்றும் நெருப்புடன் விளையாடக் கூடாது எனவும் கருத்து கூறியுள்ளது.
இந்நிலையில் இந்தப் புகாரை எதிர்கொள்ள தயாராகி வரும் பாஜக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) ஆட்சியில் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த மசோதாக்கள் விவரத்தை திரட்டி வருகிறது.
இதில் கிடைத்த விவரத்தின்படி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மற்றும் அவற்றின் ஆளுநர்கள்இடையிலான மோதல் என்பது புதிதல்ல, யுபிஏ ஆட்சியிலும் இதுபோன்ற புகார்கள் நிலவியுள்ளன, குஜராத், மபி. மாநில மசோதாக்களை அப்போதைய ஆளுநர்கள் நிலுவையில் வைத்திருந்தனர் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த 2014-ல் பிரதமராக மோடி வருவதற்கு முன் ம.பி. பாஜக அரசு, சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்த 20 மசோதாக்கள் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன. இதில் தீவிரவாதம் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தடுப்பு மசோதா, பசுவதை தடுப்பு சிறப்பு மசோதா உள்ளிட்டவையும் இடம்பெற்றிருந்தன.
இதுபோல், குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது மாநில ஆளுநர் கமலா பேனிவாலுடன் (2009 முதல் 2014 வரை) மோதல் இருந்தது. குஜராத் உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா ஆளுநரிடம் சிக்கியிருந்தது.
குஜராத்தில் தீவிரவாதம் மற்றும்குற்றங்கள் தடுப்பு சட்டம் 2011-ல் காலாவதியானது. இதை தொடர்ந்து அமல்படுத்த சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவும் ஆளுநர் பேனிவாலிடம் கிடப்பில் இருந்தது. லோக் ஆயுக்தாசட்டத்தின் கீழ் அதன் அதிகாரிகளையும் கொண்டுவரும் சட்டத்திருத்த மசோதா ஆளுநர் பேனிவாலால் திருப்பி அனுப்பப்பட்டிருந்தது.
இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து முதல்வர் மோடி, அப்போதைய குடியரசுத் தலைவரிடம் புகார் செய்திருந்தார். எனினும் குஜராத் அரசுக்கு பலன் கிடைக்கவில்லை. இச்சூழலில் 2014-ல் மோடி பிரதமரான பிறகு ஆளுநர் கமலா பேனிவால் உடனடியாக மிசோரம் மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அப்போது அவரது பதவிக் காலம் நிறைவடைய வெறும் இரண்டு மாதங்களே இருந்தன. இதேபோன்ற சூழல் தற்போது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியிலும் தொடர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT