Published : 14 Nov 2023 05:45 PM
Last Updated : 14 Nov 2023 05:45 PM
கோட்டா (ராஜஸ்தான்): ராஜஸ்தானில் ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை இல்லை என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "ராஜஸ்தானில் ஆட்சியாளர்களுக்கு எதிரான அலை இல்லை. அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, காங்கிரஸ் ஆட்சியே மீண்டும் வரும். நாங்கள் நல்லாட்சியை வழங்கி உள்ளோம். குடிநீர், மின்சாரம், கல்வி, சுகாதாரம், சாலை போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு என அனைத்தும் சிறப்பாக உள்ளது.
ராஜஸ்தானின் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் அரசு இருக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். அது உண்மை என்றால், ராஜஸ்தான் அரசை கலைத்திருக்கலாமே? அதற்கான அதிகாரம் இருந்தும் ஏன் செய்யவில்லை? ஏனெனில், அது உண்மையல்ல. தேர்தலுக்காக மக்களிடம் எதையாவது பேச வேண்டும் என்பதற்காக பேசிய பேச்சு அது" என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் தேர்தல்: ராஜஸ்தானின் 200 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட உள்ளன. கடந்த 2018-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 73 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT