Published : 14 Nov 2023 02:46 PM
Last Updated : 14 Nov 2023 02:46 PM
விதிஷா (மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அராஜகத்தால் அல்லாமல், அன்பால் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் விதிஷா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் பேசியது: “சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து மத்தியப் பிரதேசத்துக்கு நான் பல முறை வந்துள்ளேன். என்னால் 100 சதவீதம் உறுதியாக சொல்ல முடியும், இங்கே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஒரு புயல் உருவாக இருக்கிறது. நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மத்தியப் பிரதேசத்தில் 145-150 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும். இதன்மூலம் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி மலரும்.
5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். பாஜகவை நீங்கள் தேர்வு செய்யவில்லை. ஆனால், பாஜக தலைவர்களான நரேந்திர மோடி, அமித் ஷா, சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் ஒன்று சேர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கினார்கள். கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாங்கப்பட்டார்கள். இதன் காரணமாக, வாக்காளர்கள் அளித்த தீர்ப்பு, அவர்களது விருப்பத்துக்கு மாறாக மாற்றி எழுதப்பட்டது. அவர்களின் தீர்ப்பு நசுக்கப்பட்டது. பிரதமர் மோடியால் வாக்காளர்கள் ஏமாற்றப்பட்டார்கள்.
கர்நாடகாவில் நாங்கள் பாஜகவை எதிர்த்து வெற்றி பெற்றோம். இமாச்சலப் பிரதேசத்திலும் நாங்கள் அவர்களை தோற்கடித்தோம். வெறுப்பைக் கொண்டு நாங்கள் இதைச் செய்யவில்லை. அகிம்சையின் வீரர்களாக நாங்கள் திகழ்கிறோம். வெறுப்புச் சந்தையில் நாங்கள் அன்பு எனும் கடையைத் திறந்தோம். அராஜகத்தால் அல்லாமல், அன்பால் நாங்கள் வெற்றி பெற்றோம். கர்நாடகாவில் 40 சதவீத கமிஷன் அரசு தூக்கி எரியப்பட்டது. காங்கிரஸ் அரசு அங்கு அமைந்தது. அதேபோல், மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் அரசு அமையும். இது உறுதி” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT