Published : 14 Nov 2023 07:43 AM
Last Updated : 14 Nov 2023 07:43 AM
முங்கெலி: சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியின் கவுன்டவுன் தொடங்கிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் 20 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. மீதம் உள்ள 70 தொகுதிகளில் வரும் 17-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து முங்கெலி மாவட்டத்தில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சத்தீஸ்கரில் மஹாதேவ் சூதாட்ட செயலி மூலம் ரூ.508 கோடி ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் புலனாய்வு அமைப்புகள் கோடிக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்துள்ளன. இந்த வழக்கு தொடர்பாக மாநில முதல்வருக்கு மிகவும் நெருக்கமானவர் சிறையில் உள்ளார்.
முதல்வர் மீது புகார்: இதில் முதல்வர் எவ்வளவு பணம் பெற்றார் என்பதை காங்கிரஸ் கட்சி தெரிவிக்க வேண்டும். இதுபோல மற்ற தலைவர்கள் எவ்வளவு பணம் பெற்றார்கள் என்றும் டெல்லிக்கு எவ்வளவு பணம் சென்றது என்றும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ்கட்சி வரும் தேர்தலில் தோற்பதுஉறுதி. அதற்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது. தங்களுடையஆட்சியின் இறுதிகட்டம் நெருங்கிவிட்டது என்பதை காங்கிரஸும் புரிந்து கொண்டுள்ளது. இந்தத் தேர்தலில் முதல்வரே தனது தொகுதியில் தோல்வி அடைவார் என டெல்லியில் உள்ள சில பத்திரிகையாளர் நண்பர்களும் சில அரசியல் ஆய்வாளர்களும் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
அவதூறு பரப்புகின்றனர்: காங்கிரஸ் கட்சி மோடியை வெறுக்கிறது. அவர்கள் மோடி சமுதாயத்தினரையும் கூட வெறுக்கத் தொடங்கி உள்ளனர். கடந்தசில மாதங்களாக, மோடி என்றபெயரில் ஓபிசி சமுதாயத்தினர் மீதுஅவதூறு பரப்பி வருகின்றனர். இதற்காக மன்னிப்பு கோருமாறுநீதிமன்றம் உத்தரவிட்டபோதும் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.
பாபா சாஹிப் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்தது. அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர சதி செய்ததும் காங்கிரஸ் கட்சிதான்.
கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, பூபேஷ் பாகெலும் டி.எஸ்.சிங் தியோவும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வராக பதவி வகிப்பார்கள் என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தவில்லை. பூபேஷ் பாகெல் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்கிறார். தங்கள் கட்சியின் மூத்த தலைவரையே கைவிட்ட காங்கிரஸ் கட்சி மக்களையும் ஏமாற்றிவிட்டது. எனவே, வரும்தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT