Published : 13 Nov 2023 05:44 PM
Last Updated : 13 Nov 2023 05:44 PM

உத்தராகண்ட் சுரங்க விபத்து | இதுவரை 21 மீ. இடிபாடுகள் அகற்றம் - 40 பேரை மீட்கும் பணி தீவிரம்

உத்தர்காசி: உத்தராகண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டு, சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில், இதுவரை 21 மீட்டர் அளவுக்கு இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன என தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் லிமிடெட் (NHIDCL) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “21 மீட்டர் அளவிலான இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன. ஷாட்கிரேட்டிங் தொழில்நுட்பம் மூலம் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எனினும், இடிபாடுகளில் உள்ள சகதிகளை வெளியேற்ற ஹரித்வாரில் இருந்து 900 மிமீ டயா எம்எஸ் ஸ்டீல் பைப் கொண்டுவரப்படுகிறது. இன்று மாலையே அது சம்பவ இடத்துக்கு வரும் என்பதால் அதன்பிறகே தீவிரமான பணித் தொடங்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இன்னும் 35 மீட்டர் அளவுக்கு இடிபாடுகளை அகற்ற வேண்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில், அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து மீட்புக் குழு தரப்பில், "தொழிலாளர்கள் பத்திரமாக இருக்கின்றனர். வாக்கி டாக்கி மூலம் அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. கம்ப்ரஸர் மூலம் அவை வழங்கப்பட்டுள்ளன.தொடர்ந்து ட்ரில்லிங் பணி நடைபெறுகிறது. இடிபாடுகளில் ட்ரில் செய்து தொழிலாளர்கள் வெளியேற பாதை அமைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளை பார்வையிட்ட உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "சுரங்கப்பாதை பணி ஏறக்குறைய நான்கரை கிலோ மீட்டர் நீளம் கொண்டது. கட்டுமானப் பணிகள் 4 கிலோ மீட்டருக்கு நிறைவடைந்தன. எதிர்பாராத இந்த விபத்தில் சுரங்கத்தினுள் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டேராடூன் மற்றும் ஹரித்வாரில் இருந்து ஹியூம் பைப் மீட்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளது. உள்ளே எல்லாம் நன்றாக இருக்கிறது. வெப்பநிலையும் சாதாரணமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்தது எப்படி? - உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கான் பகுதியை சில்க்யாரா பகுதியுடன் இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சார் தாம் சாலை திட்டத்தின் ஒருபகுதியாக, உத்தர்காசியிலிருந்து யமுனோத்ரி தாம் வரையிலான பயணத்தை 26 கிலோமீட்டர் குறைக்கும் நோக்கத்தில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஞாயிறு அதிகாலை 4 மணியளவில் 4.5 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x