Published : 13 Nov 2023 10:34 AM
Last Updated : 13 Nov 2023 10:34 AM
உத்தர்காசி: உத்தராகண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து ஏற்பட்டு சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து மீட்புக் குழு தரப்பில், "தொழிலாளர்கள் பத்திரமாக இருக்கின்றனர். வாக்கி டாக்கி மூலம் அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. கம்ப்ரஸர் மூலம் அவை வழங்கப்பட்டுள்ளன.தொடர்ந்து ட்ரில்லிங் பணி நடைபெறுகிறது. இடிபாடுகளில் ட்ரில் செய்து தொழிலாளர்கள் வெளியேற பாதை அமைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\
மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ - டிபெட்டன் எல்லை பாதுகாப்பு போலீஸார், எல்லை சாலை அமைப்பினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட அவசரகால ஆபரேஷன் மையம் அளித்துள்ள தகவலின்படி விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பிஹார், ஜார்க்கண்ட், உத்தர் பிரதேச், மேற்கு வங்கம், ஒடிசா, உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம். மேற்கு வங்கம், ஒடிசா, உத்தராகண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.
விபத்து நடந்தது எப்படி? உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கான் பகுதியை சில்க்யாரா பகுதியுடன் இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சார் தாம் சாலை திட்டத்தின் ஒருபகுதியாக, உத்தர்காசியிலிருந்து யமுனோத்ரி தாம் வரையிலான பயணத்தை 26 கிலோமீட்டர் குறைக்கும் நோக்கத்தில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஞாயிறு அதிகாலை 4 மணியளவில் 4.5 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
மீட்புப்பணி குறித்து பேசிய உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "இச்சம்பவம் குறித்து அறிந்ததில் இருந்தே அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருகிறேன். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர். அனைவரும் பாதுகாப்பாக திரும்பி வர இறைவனை பிரார்த்திக்கிறோம்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று காலை தொழிலாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment