Published : 11 Nov 2023 05:20 PM
Last Updated : 11 Nov 2023 05:20 PM

‘ஏழைப் பெண்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி’ - மத்தியப் பிரதேச பாஜகவின் தேர்தல் அறிக்கை

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள பாஜக, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு முதுகலைப் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. தலைநகர் போபாலில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தேர்தல் ஆறிக்கையை வெளியிட்டார். மத்திய அமைச்சர்கள் அஷ்விணி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,700 ஆகவும், நெல்லுக்கு ரூ.3,100 ஆகவும் வழங்கப்படும். மிக முக்கியமாக ஏழைகளுக்கு வீடு கட்டித் தரப்படும். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் 12ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும். பிரதமரின் இலவச சிலிண்டர் திட்டப் பயனாளிகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர் ரூ.450-க்கு விநியோகிக்கப்படும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். மத்தியப் பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டதைப் போன்று ஐஐடி, மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும். பழங்குடி மக்களின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் ரூ.3 லட்சம் கோடியில் 6 புதிய எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ.பி. நட்டா உரை: "தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ஜெ.பி.நட்டா, “தேர்தல் அறிக்கைகளை அரசாங்கத்தின் செயல் திட்டமாக மாற்றியமைத்து செயல்படும் ஒரே கட்சி பாஜக மட்டுமே. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, தேர்தல் அறிக்கையை செயல்படுத்துவது தொடர்பாக பாஜக கண்காணிக்கிறது" என்று கூறினார்.

மத்தியப் பிரதேச தேர்தல்: மத்தியப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு நவம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் அக்டோபர் 21-ம் தேதி தொடங்கி, 30-ம் தேதி முடிவடைந்தது. வேட்புமனுக்கள் 31-ம் தேதி வரை பரிசீலிக்கப்பட்டன. நவம்பர் 2-ம் தேதியுடன் வேட்புமனுக்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன. பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x