Published : 11 Nov 2023 06:53 AM
Last Updated : 11 Nov 2023 06:53 AM
புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு பிரச்சினை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்சு துலியா ஆகியோர் அடங் கிய அமர்வில் கடந்த செவ்வாய் கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறும்போது, ‘‘ஒற்றை இலக்கம் மற்றும்இரட்டை இலக்க எண்கள் கொண்டதனியார் வாகனங்களை மாறி, மாறி இயக்கும் திட்டம் குறைந்த பலனை அளித்தாலும், அந்த நடைமுறையை வெள்ளிக் கிழமை முதல் டெல்லி அரசு அமல்படுத்த வேண்டும். டெல்லியில் பதிவு செய்யப்பட்ட டாக்சிகளை மட்டுமே சாலைகளில் அனுமதிப்பது தொடர்பாக டெல்லி அரசு பரிசீலிக்கவேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை இதுகுறித்து கருத்து தெரிவித்த டெல்லி அரசு, ஒற்றை மற்றும் இரட்டை இலக்க எண்களை மாறி, மாறி இயக்கும் திட்டம் சிறந்தபலன் அளிக்கிறதா என்பதை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்தபின்பே அமல்படுத்தப்படும்’’ என்றது.
இதனால் நீதிபதிகள் நேற்றையவிசாரணையில் டெல்லி அரசை கடுமையாக விமர்சித்தனர். ‘‘சுமையை நீதிமன்றத்தின் மீதுசுமத்த ஆம் ஆத்மி அரசு முயற்சிக்கிறது. இந்த முயற்சியில் ஈடுபடாமல், டெல்லி அரசு செயலாற்றும் பணியில் ஈடுபட வேண்டும்’’ என நீதிபதிகள் கூறினர்.
அதன்பின் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க எண்கள் படி வாகனங்களை இயக்குவதால் மாசு 13 சதவீதம் குறைந்துள்ளது என உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு தெரிவித்தது. அதன்பின் நீதிபதிகள் கூறியதாவது:
வாகன மாசுவின் மொத்த அளவு 17 சதவீதம். அதில் 13 சதவீதம் குறைவதாக நீங்கள் கூறுகிறீர்கள். இத்திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் அளித்துவிட்டோம். இனி இதுகுறித்து டெல்லி அரசு முடிவு செய்து கொள்ளலாம். உச்ச நீதி மன்ற உத்தரவால்தான் காற்று மாசு ஏற்படுகிறது என இனி நீங்கள் கூற முடியாது.
மேலும் பஞ்சாப் மாநிலத்தில் நெல் பயிரிடுவதற்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதால், அங்கு நீர்மட்டமும் குறைந்து வருகிறது. பஞ்சாபில் இன்னொரு பாலைவனம் நமக்கு வேண்டாம். அறுவடைக்குப்பின் வைக்கோல்களை எரிப்பதால் காற்று மாசும் அதிகரிக்கிறது. அங்கு வைக்கோல் எரிக்கப்படுவதும் நிறுத்தப்பட்டு காற்றின் தரம் மேம்பட நாங்கள் விரும்புகிறோம். இதற்கான நடவடிக்கை எடுப்பது மத்திய, மாநில அரசுகளின் பணி. பஞ்சாபில் நெல் உற்பத்தியை படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கை தேவை.
இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின் டெல்லி சுற்றுச்சூழல் துறைஅமைச்சர் கோபால் ராய் நேற்றுஅளித்த பேட்டியில் , ‘‘ஒற்றை மற்றும் இரட்டை இலக்க எண்அடிப்படையில் தனியார் வாகனங்கள் இயக்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தீபாவளிக்குப் பின் காற்று மாசுவின் தரத்தை பொருத்து பரிசீலிக்கப்படும். காற்றின் தரம் தற்போது மேம்பட்டுள்ளதால், இத்திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT