Published : 05 Jan 2018 03:24 PM
Last Updated : 05 Jan 2018 03:24 PM

வீட்டில் இருந்தே ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைப்பது எப்படி?

ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பதற்காக இலவச வாடிக்கையாளர் சேவை எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஷோரூம் செல்லாமலே ஆதார் எண்ணை இணைக்கலாம்.

இத்தகவல் டிஜிட்டல் இந்தியாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஏர்செல், ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்கள் 14546 என்ற இலவச எண்ணை அழைக்க வேண்டும். இதன்படி மொபைல் எண் மூலமாக, இருக்கும் இடத்தில் இருந்தே ஆதார் எண்ணை இணைக்கமுடியும்.

ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைப்பது எப்படி?

1.முதலில் உங்களின் ஆதார் எண்ணைக் கையில் வைத்துக்கொள்ளுங்கள்.

2. உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 14546 என்ற இலவச எண்ணை அழையுங்கள்.

3. பதிவு செய்யப்பட்ட குரல் ஆதார் ஓடிபி (OTP- ஒரு முறை கடவுச்சொல்) இருந்தால் 1 ஐ அழுத்தச் சொல்லும். நாம் முதல்முறையாக அழைப்பதால் இல்லையென 2-ஐ அழுத்தவும்.

4. நம்முடைய மொபைல் எண்ணை சரிபார்க்க ஒப்புதல் அளிக்கவேண்டும். இதை உறுதிசெய்ய 1-ஐ அழுத்தவும்.

5. அடுத்ததாக நம்முடைய 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். மேலே தொடர 1-ஐ அழுத்தவும். விவரங்களைச் சரிபார்க்க சில விநாடிகள் ஆகும் என்பதால் அழைப்பில் காத்திருக்கவும்.

6. வாடிக்கையாளர் மையம் நம்முடைய மொபைல் எண் மற்றும் சிம் பயன்பாட்டை உறுதி செய்யும். அத்துடன் ஆதாரின்படி நம்முடைய பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம், புகைப்படம் ஆகியவற்றை அளிக்க ஒப்புதல் அளிக்கிறீர்களா, உங்களின் ஓடிபியே கையெழுத்தாக எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறும். அதை உறுதிசெய்ய 1-ஐ அழுத்தவும்.

7. ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள நம்முடைய மொபைல் எண்ணுக்கு 6 இலக்க ஓடிபி எண் வரும். அதை சரியாக உள்ளீடு செய்யவும்.

8. அதைத் தொடர்ந்து சரிபார்ப்புப் பணியை மேற்கொள்ள 2-ஐ அழுத்தவும். இத்துடன் ஆதாரை இணைப்பதற்கான பணிகள் முடிந்து சரிபார்ப்பு முறை தொடங்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ள குரல் ஒலிக்கும்.

இதையடுத்து 48 மணி நேரத்தில் ஆதாருடன் மொபைல் எண் இணைக்கப்படும். குறுஞ்செய்தி வழியாக இத்தகவல் உறுதிப்படுத்தப்படும்.

இதன்மூலம் மொபைல் ஷோ ரூம்களுக்குச் சென்று வரிசையில் காத்திருக்காமல் சுமார் 5 நிமிடங்களில் இலவசமாகவே ஆதாரை இணைக்கமுடியும்.

அதே நேரத்தில் ஆதார் எண்ணும், மொபைல் எண்ணும் வேறு வேறு மாநிலத்தில் இருந்தால் அருகிலுள்ள மொபைல் ஷோரூம்களுக்குச் சென்று மார்ச் 31-ம் தேதிக்கு முன்னதாக ஆதாரை இணைப்பது அவசியம் ஆகும்.

இந்த முறையில் ஆதாரை இணைப்பதில், கைரேகை எதுவும் கேட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x