Published : 10 Nov 2023 01:56 PM
Last Updated : 10 Nov 2023 01:56 PM

“ஜிஎஸ்டி வரியல்ல; சிறு தொழில்களை ஒழிப்பதற்கான ஆயுதம்” - ராகுல் காந்தி

சாட்னாவில் உரையாற்றிய ராகுல் காந்தி

சாட்னா (மத்தியப் பிரதேசம்): ஜிஎஸ்டி என்பது வரியல்ல என்றும், அது சிறு குறு நடுத்தரத் தொழில்களை ஒழிப்பதற்கான ஆயுதம் என்றும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தின் சாட்னா நகரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, “மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில்லை. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. அவர்கள், சிறிய அளவில் பொருட்களை உற்பத்தி செய்பவர்களாக இருக்கலாம், கடைகளை நடத்துபவர்களாக இருக்கலாம்.

லட்சக்கணக்கான இதுபோன்ற நிறுவனங்களில், மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்கள் பணியாற்றுகிறார்கள். உண்மையில் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பவர்கள் அவர்கள்தான். பாஜக ஆட்சியில், இத்தகைய நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. அவர்கள் சிறு, குழு, மத்தியத் தர நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்றவற்றைக் கொண்டு வந்தார்கள். ஜிஎஸ்டி என்பது வரியல்ல. அது சிறு, குழு, நடுத்தர நிறுவனங்களை ஒழிப்பதற்கான ஆயுதம்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக கமல்நாத் இருந்தார். அந்த அரசு, மிகப் பெரிய தொழிலதிபரான அதானிக்கு ஆதரவாக எதையும் செய்யவில்லை. விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், சிறிய அளவில் கடைகளை நடத்துபவர்கள் போன்றோருக்கு ஆதரவாகவே செயல்பட்டது. இதன் காரணமாகவே, பெரும் தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள், பிரதமர் மோடி மற்றும் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு கமல்நாத் அரசை கைப்பற்றினார்கள். உண்மையில் அவர்கள் அந்த அரசை திருடினார்கள்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x