Published : 09 Nov 2023 01:31 PM
Last Updated : 09 Nov 2023 01:31 PM
டோங்க்: ராஜஸ்தானில் யார் ஆட்சியை வழிநடத்துவது என்பதை எம்எல்ஏக்களும், காங்கிரஸ் தலைமையும் முடிவு செய்யும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ராஜஸ்தானில்,சில மாதங்களாகவே முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே வெளிப்படையான மோதல் போக்கு நிலவியது. இதற்கிடையில் காங்கிரஸ் தலைமையில் இருந்து பல்வேறுகட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும், கடந்த பாஜக ஆட்சியில் நடந்த ஊழல்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறு, உண்ணாவிரதம், பாதயாத்திரை போன்றவற்றை முன்னெடுத்துவந்தார் சச்சின் பைலட்.
இத்தகைய சூழலில்தான் மல்லிகார்ஜுன கார்கே, அசோக் கெலாட்டையும் சச்சின், பைலட்டையும் தனது இல்லத்துக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு நாங்கள் இணைந்து செயல்பட்டால் ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியமைப்போம் என அசோக் கெலாட் கூறினார்.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டியளித்தார். அதில், "காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்கிறது. ஆனால் பாஜகவில்தான் கோஷ்டி மோதல், பதற்றம், சண்டைகள் உள்ளன. மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் என்னிடம் ‘மன்னிக்கவும், மறந்துவிடவும், முன்னேறவும்' (Forgive, Forget, Move On) என்று கூறினார்கள். நான் ராஜஸ்தானின் எதிர்காலத்தை பார்க்கிறேன். முதலில் காங்கிரஸை ஒன்றாக சேர்த்து வெற்றிபெறச் செய்வோம். அதன்பிறகு, யார் என்ன செய்ய வேண்டும் என்பதை எம்எல்ஏக்கள் மற்றும் கட்சித் தலைமை முடிவு செய்யும்.
2018-ல் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால் இந்த முறை நாங்கள் ஆளுங்கட்சியாக இருக்கிறோம். இந்த ஐந்தாண்டுகளாக கிராமங்களில் நாங்கள் கொண்டு வந்த வளர்ச்சியை மக்கள் பார்த்துள்ளனர். இந்தத் தேர்தல் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும், டோங்க் தொகுதியில் கோவிட்-19 தொற்றின்போது மக்களுக்கு நிறைய உதவிகளை செய்துள்ளோம். எனவே என்னுடைய டோங்க் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும். உணர்ச்சிகரமான பிரச்சினைகளை (emotive issues) பாஜக அரசியலாக்குகிறது. மின்சாரம், குடிநீர், கல்வி போன்ற மக்கள் நலப் பிரச்சனைகளை பேசாமல், அதற்குப் பதிலாக மதம், கோயில்கள், மசூதிகள் பற்றி பேசுகிறது பாஜக’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT