Published : 09 Nov 2023 11:42 AM
Last Updated : 09 Nov 2023 11:42 AM

”ஏன் உங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள்” - மோடியை சாடிய ராகுல் காந்தி

ராகுல் காந்தி

அம்பிகாபூர்: பிரதமர் நரேந்திர மோடி தன்னை ஏன் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக (OBC) அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்த நிலையில், சத்தீஸ்கரின் அம்பிகாபூரில் நடந்த தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "பிரதமர் மோடி ஒவ்வொரு மேடையிலும் பேசும்போது நான் ஒரு ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன்’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனால் நான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பற்றிப் பேசும்போது, இந்தியாவில் சாதியே கிடையாது. அதைத் தாண்டி சாதி இருக்கிறதென்றால், அது ஏழை என்ற ஒரேயொரு சாதிதான் என்று சொல்கிறார். பிறகு ஏன் பிரதமர் மோடி தன்னை ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக (OBC) அடையாளப்படுத்திக் கொள்கிறார்?

கறுப்புப் பணம், பணமதிப்பு நீக்கம் தொடர்பாகப் பிரதமர் மோடி அளித்த அனைத்து வாக்குறுதிகளும் பொய்யானவை. உங்களுக்கு ரூ.15 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்தார். நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்களா? பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் என்றார். அது நடந்ததா?

விவசாய மசோதாவால் (Farm Bill) விவசாயிகள் பயனடைவார்கள் என்றார். விவசாயிகளே அந்த மசோதாவை நிராகரித்தனர். யார் உண்மையைப் பேசுகிறார்கள், யார் பொய் சொல்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த தேர்தலின்போது விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x