Published : 09 Nov 2023 05:35 AM
Last Updated : 09 Nov 2023 05:35 AM
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் "அலிகர்" நகரம், ‘ஹரிகர்’ என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அலிகர் மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, அந்த முடிவை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஏற்க உள்ளது.
கடந்த 2016-ல் பாஜக ஆட்சி அமைந்தது முதல் உத்தர பிரதேசத்தில் பல முக்கிய நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. கடந்த 2019-ல் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இதனை குறிப்பிட்டிருந்தார். பைசாபாத், அலகாபாத், முகல்சராய் ஆகிய முஸ்லிம் பெயர்கள் முறையே அயோத்யா, பிரயாக்ராஜ், தீன்தயாள் உபாத்யாயா நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டன. அதன் வழியில், தற்போது உ.பி.யின் மற்றொரு முக்கிய நகரமான அலிகர் பெயரும் ஹரிகர் என மாற்றப்பட உள்ளது.
இதற்காக, நேற்று முன்தினம் அலிகர் மாநகராட்சி கூட்டத்தில் அலிகர் பெயரை ஹரிகர் என மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அலிகர் மாநகராட்சியின் 90 உறுப்பினர்களில் பாஜகவின் 45 உறுப்பினர்கள் மற்றும் 4 சுயேச்சை உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
மாநகராட்சியின் இந்த முடிவு முதல்வர் யோகிக்கு அனுப்பப்பட்டுள்ளது. உ.பி. அரசு இதனை ஏற்றுக்கொண்டு அலிகர் பெயரை மாற்றும் அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் அலிகர் நகர பாஜக மேயரான பிரஷாந்த் சிங்கால் கூறும்போது, ‘பல வருடங்களாக இந்த பெயர் மாற்றத்திற்கான கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அலிகரின் கிராமப் பஞ்சாயத்து ஒன்றில் கடந்த 2021-ல் முதன்முறையாக இதற்கான முடிவு எடுக்கப்பட்டு முதல்வர் யோகிக்கு அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தற்போதைய நடவடிக்கையையடுத்து அலிகர் பெயரை ஹரிகர் என மாற்ற மாநில அரசு ஆவன செய்யும் என நம்புகிறோம்" என்றார். இதுபோல், ஒரு மாநகராட்சி தன் நகரின் பெயர் மாற்றத்திற்காக தனது பரிந்துரையை அளிக்க முடியும். இதை ஏற்று அங்கீகரிக்க வேண்டி, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய அரசின் அலுவலகங்களுக்கு மாநில அரசு அனுப்பி வைக்கும். அதன் பிறகே அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்படும்.
உ.பி.யின் மேலும் இரண்டு முக்கிய நகரங்களான ஆக்ராவை அகர்வால் அல்லது அக்ரஹான் எனவும், முசாபர்நகரை லஷ்மி நகர் எனவும் மாற்றவேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT