Published : 08 Nov 2023 02:43 PM
Last Updated : 08 Nov 2023 02:43 PM

சர்ச்சை பேச்சு: பிஹார் முதல்வர் நிதிஷ் பதவி விலகக் கோரி சட்டப்பேரவையில் பாஜகவினர் முழக்கம்

பாட்னா: மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்த தனது சர்ச்சையான கருத்துக்காக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் முழக்கங்கள் எழுப்பினர். முன்னதாக, தனது கருத்துக்காக நிதிஷ் குமார் மன்னிப்புக் கோரினார்.

பிஹார் சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்த தனது கருத்துக்கு விளக்கம் அளிக்க விரும்புதாக கூறினார். அப்போது அவர், "நான் கூறிய வார்த்தைகளை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். என்னுடைய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் பெண் கல்வியைப் பற்றி மட்டுமே பேசினேன். என்னுடயை கூற்று யாரையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்றார். முதல்வர் தனது கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்ட பின்னர் பாஜக எம்எல்ஏக்கள் ‘அவர் பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் பிஹாரி சவுத்ரி, ‘முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கூற பாஜக எம்எல்ஏக்களுக்கு உரிமையில்லை’ என்றார்.

இதனைத் தொடந்து முதல்வர் நிதிஷ் குமார், இத்தகைய கருத்துகளைக் கூறியதற்காக தன்னையே தான் கடிந்து கொள்வதாகவும், அதற்காக வெட்கப்படுவதாககவும் கூறினார். மேலும், ‘காரணமே இல்லாமல் நீங்கள் எல்லோரும் ஏன் குழப்பத்தில் ஈடுபடுகின்றீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். முன்னதாக, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று சட்டப்பேரவைக்கு வரும்போது பிரதான நுழைவாயிலில் நின்று பாஜக உறுப்பினர்கள் அவரைத் தடுத்தனர். இதனைத் தொடர்ந்து நேராக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதல்வர், தனது கருத்துகளுக்காக மன்னிப்பும் கோரினார்.

இதனிடையே, நிதிஷ் குமார் சட்டப்பேரவையில் மன்னிப்பு கேட்டதற்கு வரவேற்கும் விதமாக லாலு பிரசாத் யாதவின் மனைவியும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்வுமான ராப்ரி தேவி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "அந்த சர்ச்சைக்குரிய கருத்து அவரது வாயிலிருந்து தெரியாமல் வந்துவிட்டது. அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். பேரவை நடைபெற அனுமதிக்க வேண்டும். நிதிஷ் ஜி தனது செய்கைக்காக வருத்தம் தெரிவித்துவிட்டார்" என்று ராப்ரி தெரிவித்தார். பிஹாரில் ஆளும் கூட்டணியில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாத தளமும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாத தளமும் அங்கம் வகிக்கின்றன.

பிஹார் சட்டப்பேரவையில் மாநிலத்தில் நடந்த சாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் பல்வேறு பிரிவினர்களின் பொருளாதார நிலை குறித்தும் விரிவான அறிக்கையை அரசு செவ்வாயக்கிழமை தாக்கல் செய்தது. அப்போது பேசிய மாநில முதல்வர் நிதிஷ் குமார் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண்கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அவர், "கணவனின் செயல்கள் அதிக பிறப்பு விகிதத்துக்கு வழிவகுக்கின்றன. கல்வியறிவு பெற்ற பெண் இதனை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை நன்கு அறிவார். இந்தக் காரணங்களால் குழந்தை பிறக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளது. பத்திரிகையாளர்கள் இதனை நன்கு அறிவார்கள். முன்பு 4.3 ஆக இருந்த பிறப்பு விகிதம் தற்போது 2.9 ஆக குறைந்துள்ளது. விரைவில் அது 2 ஆக குறையும்” என்று கூறினார். முதல்வரின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.

முதல்வர் நிதிஷ் குமார் இந்தக் கருத்துகளை தெரிவிக்கும்போது, துணை முதல்வர் தேஜஸ்வி யாகவ் உள்ளிட்ட பலரும் சிரித்தனர். அது பாஜக பெண் எம்எல்ஏக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. முதல்வரின் இந்தக் கருத்துகளுக்காக அவரை ‘பெண் வெறுப்புடைய மோசமான ஆணாதிக்கவாதி’ என்று பாஜக சாடியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x