Published : 08 Nov 2023 01:10 PM
Last Updated : 08 Nov 2023 01:10 PM
பாட்னா: மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், அதற்காக மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று சட்டப்பேரவைக்கு வரும் போது பிரதான நுழைவாயிலில் நின்று பாஜக உறுப்பினர்கள் அவரைத் தடுத்தனர். இதனைத் தொடர்ந்து நேராக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதல்வர், "எனது வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமில்லை. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை நான் எப்போதும் வலியுறுத்தியுள்ளேன். பெண்களுக்கான அதிகாரம் மற்றும் முன்னேற்றத்திற்காக நான் எப்போதும் துணை நின்றுள்ளேன்" என்று தெரிவித்தார்.
சர்ச்சை பேச்சு: முன்னதாக, பிஹார் சட்டபேரவையில் செவ்வாய்கிழமை பேசிய அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சைக்கு வழிவகுத்தது. கல்வியறிவு பெற்ற பெண் (மனைவி) கலவியின் போது தனது கணவனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து விளக்கிப்பேசினார். அப்போது அவர், "கணவனின் செயல்கள் அதிக பிறப்பு விகிதத்துக்கு வழிவகுக்கின்றன. கல்வியறிவு பெற்ற பெண் இதனை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை நன்கு அறிவாள். இந்தக் காரணங்களினால் குழந்தை பிறக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் இதனை நன்கு அறிவார்கள். முன்பு 4.3 ஆக இருந்த பிறப்பு விகிதம் தற்போது 2.9 ஆக குறைந்துள்ளது. விரைவில் அது 2 ஆக குறையும்" என்று கூறினார்.
பாஜக கண்டனம்: முதல்வரின் இந்தக் கருத்துகளுக்காக அவரை பெண் வெறுப்புடைய மோசமான ஆணாதிக்கவாதி என்று பாஜக சாடியது. மேலும் அவரைப் பதவி விலகவும் கோரியது. மத்திய இணையமைச்சர் அஸ்வின் குமார் சவுபே கூறுகையில், "பேரவையில் இவ்வாறு பேசுவது வெட்கக்கேடானது. அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது. முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.
பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹாத் பூனாவாலா (Shehzad Poonawalla) கூறுகையில், "சட்டப்பேரவைக்குள் நிதிஷ்குமார் பயன்படுத்திய வார்த்தை மிகவும் மோசமான, அநாகரீகமான, பெண் வெறுப்பு, பாலியல் மற்றும் ஆணாதிக்கச் சிந்தனை கொண்டது. இதுதான் பிஹார் முதல்வரின் மனநிலை. மாநில சட்டப்பேரவையில் இப்படி பேசப்பட்டால் பிஹார் பெண்களின் நிலை என்னவாகும்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நிதிஷ் குமாரின் பேச்சு தரக்குறைவானதாக இருந்ததகாக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா ஷர்மா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், "நேற்றைய பிஹார் முதல்வரின் இழிவான அறிக்கை மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெண் எம்எல்ஏக்களின் முன்னிலையில் அவர் பேசிய விதம் மூன்றாம் தர சினிமா வசனம் போல இருந்தது. இதில் மோசமான விஷயம் அவருக்கு பின்னால் இருந்த ஆண்கள் அதற்காக சிரித்தது. முதல்வரின் செயல்களும் சைகைகளும் ஆபாசமான நகைச்சுவைப் போலவே இருந்தது. இதில் இன்னும் மோசமான விஷயம் அவைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்காத சபாநாயகரின் செயல். பிஹார் சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரின் பேச்சு நீக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
துணைமுதல்வர் விளக்கம்: இந்தச்சூழலில் முதல்வர் நிதிஷ் குமார் பாலியல் கல்வி பற்றியே பேசியுள்ளார். அவரது பேச்சு தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது என்று பிஹார் துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். அவர் கூறுகையில், "முதல்வர் பாலியல் கல்வியைப் பற்றிதான் பேசினார். மக்கள் இதனைப் பற்றி பேசத் தயங்குகின்றனர். ஆனால் இவை நமது பள்ளிகளில் அறிவியியல், உயிரியியலாக கற்றுத்தரப்படுகின்றன. நமது குழந்தைகளும் இதனைப் படிக்கிறார்கள். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நடைமுறையில் என்ன செய்யவேண்டும் என்றே அவர் கூறினார். அது தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது" என்றார். பிஹாரில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ நீது தேவி முதல்வருக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர், "முதல்வர் நிதிஷ் குமார் தவறான நோக்கத்துடன் எதுவும் பேசவில்லை. அவர் ஒரு எளிய கருத்தை விளக்க முயன்றார். ஆனால் பாஜக இதனை திரிக்க முயல்கிறது" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT