Published : 08 Nov 2023 10:22 AM
Last Updated : 08 Nov 2023 10:22 AM

''நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியைப் போன்றது 5 மாநில தேர்தல்'' - காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால்

புதுடெல்லி: அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான செமி ஃபைனல் போன்றது தற்போதைய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் என்று காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "மிசோரம், சத்தீஸ்கர், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியைப் போன்றது. இந்த 5 மாநிலத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதில், நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது அம்மாநில மக்களுக்கு நாங்கள் 5 வாக்குறுதிகளைக் கொடுத்தோம். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்டோரின் நலன்களை உறுதிப்படுத்தும் வாக்குறுதிகள் அவை. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். அதேபோல், நாங்களும் வெற்றி பெற்ற 2 மாதங்களுக்குள் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். அதன்மூலம், வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எப்படி என்பதை முழுமையாக செய்து காண்பித்தோம். இந்த 5 மாநிலங்களிலும்கூட காங்கிரஸ் கட்சி என்னென்ன வாக்குறுதிகளை அளித்ததோ, அவை அனைத்தையும் நாங்கள் தாமதமின்றி நிறைவேற்றுவோம். ஏனெனில், இது நம்பிக்கை சார்ந்தது.

ஆனால், பாஜக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியதா? பாஜக ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். அவர் பதவிக்கு வந்து 9 வருடங்கள் முடிந்துவிட்டன. எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது? அதேபோல், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் ரூ. 15 லட்சம் வழங்கப்படும் என்று நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். கருப்புப் பணத்தை ஒழித்து ரூ. 15 லட்சத்தைக் கொடுத்தாரா? இவை மட்டுமல்ல, ஏராளமான வாக்குறுதிகளை பாஜக அளித்தது. ஆனால், அவற்றை அக்கட்சி நிறைவேற்றவில்லை. ஆனால், எங்களைப் பொறுத்தவரை நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். எனவே, நாட்டு மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்." இவ்வாறு கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x