Published : 08 Nov 2023 06:37 AM
Last Updated : 08 Nov 2023 06:37 AM

காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நக்சலைட்கள் தைரியம் அடைகின்றனர்: சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர்

சூரஜ்பூர்: சத்தீஸ்கரில் நக்சலிஸத்தை கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நக்சலைட்டுகளும் தீவிரவாதிகளும் தைரியம் அடைகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல்அறிவிக்கப்பட்டது. இதில் 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. எஞ்சிய 70 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலை சந்திக்கும் சூரஜ்பூர் மாவட்டத்தில் பாஜகசார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிபங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்குவரும்போதெல்லாம், தீவிரவாதிகளும் நக்சலைட்டுகளும் தைரியம் அடைகின்றனர். குண்டுவெடிப்பு, கொலைகள் பற்றிய செய்திகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிவிக்கப்படுகின்றன. எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, அங்கெல்லாம் குற்றம் மற்றும் கொள்ளையின் ஆட்சிதான் நடக்கிறது. சத்தீஸ்கரில் நக்சல் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.

சமீப காலமாக எங்கள் கட்சித் தொண்டர்கள் எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டனர். சில நாட்களுக்கு முன் எங்கள் கட்சித் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளின் நிழலில் நீங்கள் வாழ விரும்புகிறீர்களா? உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும், மாலையில் உங்கள் மகன் வீடு திரும்பவில்லை, அவரது உடல்தான் வரும் என்றால், அந்த பணத்துக்கான தேவை என்ன? எனவே அனைவருக்கும் பாதுகாப்பு முக்கியம். மாநிலத்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும், ஒவ்வொரு வாக்குச் சாவடியில் இருந்தும் காங்கிரஸை அகற்றுவது அவசியம்.

சத்தீஸ்கர் முதல்வருக்கு ரூ.500 கோடி லஞ்சம் கொடுத்ததாக, மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கின்முக்கிய குற்றவாளி தொலைக்காட்சியில் கூறியுள்ளார். சூதாட்ட செயலிஊழலுக்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.

மகாதேவ் பெயரில் இவர்கள் ஊழல் செய்துள்ளனர். இந்த ஊழல்நம் நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x