Last Updated : 18 Jan, 2018 05:27 PM

 

Published : 18 Jan 2018 05:27 PM
Last Updated : 18 Jan 2018 05:27 PM

புல்லட் ரயில் திட்டத்தில் பயனடையப்போவது ஜப்பான் நிறுவனங்கள்: ‘மேக் இன் இந்தியா’வுக்கு பின்னடைவு?

இந்தியாவில் முதல் புல்லட் ரயில் விடும் திட்டத்தில் மத்திய அரசு தீவிரம் காண்பித்து வரும் நிலையில், அத்திட்டத்துக்காக 70% சப்ளைகளை மேற்கொள்ளவிருப்பது ஜப்பான் நிறுவனங்களே என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

17 பில்லியன் டாலர்கள் இந்திய புல்லட் ரயில் திட்டத்தில் ஜப்பானிய ஸ்டீல் மற்றும் பொறியியல் நிறுவனங்கள் பெரிய அளவில் ஒப்பந்தங்களைப் பெறுவதாக இது தொடர்பான அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

இந்த புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் நிதியளிக்கிறது, ஜப்பானிய நிறுவனங்கள் 80% பாகங்களை வழங்கவுள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜப்பானிய போக்குவரத்துத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, இருநாடுகளும் இன்னமும் இதற்கான திட்டவகுத்தல்களை பேசி வருகின்றன என்றும் ஜூலை மாதம் இதற்கான பாகங்கள், சப்ளைகள் குறித்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் ஆனால் இவரும் தன் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.

புல்லட் ரயில் திட்டத்துக்கான ஜப்பான் இந்தியா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இரண்டு அம்சங்கள் குறிப்பிடத்தகுந்தவை. மேக் இன் இந்தியா திட்டத்தை வளர்த்தெடுப்பது மற்றும் தொழில்நுட்ப பரிவர்த்தனை ஆகிய இரண்டு அம்சங்களாகும், இதன் மூலம் நாட்டில் உற்பத்தி ஆலைகளை உருவாக்கி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.

ஏற்கெனவெ புல்லட் ரயில் திட்டம் ஒரு விரயமான திட்டம் என்றும் இந்த முதலீட்டை வேறு ஆக்கப்பூர்வ திட்டங்களுக்குச் செலவிடலாம் என்று விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து புல்லட் ரயில் திட்டத்தைச் செயல்படுத்த உருவாக்கப்பட்ட நேஷனல் ஹை ஸ்பீட் ரயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் அச்சல் கரே கூறும்போது, “இந்திய பண்பாடு மற்றும் ஒழுங்கமைப்புக்கும் ஜப்பானிய பண்பாடு மற்றும் ஒழுங்கமைப்புக்கும் வேறுபாடுகள் உள்ளதாக ஜப்பான் கவலைப்படுகிறது” என்றார். அதாவது “பணிக்கலாச்சாரம்” வேறு என்று ஜப்பான் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துடன் கருதுகிறது. மேலும் இந்திய நிறுவனங்களின் திறமை மற்றும் உரிய காலத்தில் பணிகளை முடிக்கும் திறமை குறித்து ஜப்பானுக்கு நிறைய மாற்றுக் கருத்துகள் இருப்பதாக ராய்ட்டர்ஸிடம் கூறிய ரயில்வே அதிகாரிகள் கூறியதாகவும் தெரிகிறது.

வர்த்தகத்தை எளிதாகச் செய்ய முடியக்கூடிய 190 நாடுகளில் இந்தியா 100-வது இடத்தில் இருப்பதாக உலகவங்கி தெரிவிக்கிறது.

ஜப்பான் போக்குவரத்து அமைச்சகத்தில் உள்ள பன்னாட்டு பொறியியல் விவகாரத்துறை இயக்குநர் டோமோயுகி நகானோ அதிவேக ரயில் ஒழுங்கமைப்புத் திட்டங்களில் இந்திய நிறுவனங்களுக்கு அனுபவம் இல்லை என்று கூறியுள்ளார்.

ஜப்பானிய அதிகாரிகள் மேக் இன் இந்தியா திட்டத்துடன் இத்திட்டத்தை இணைத்துச் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினாலும் பெரும்பாலான இந்திய அதிகாரிகள் புல்லட் ரயில் திட்டத்தில் இந்திய நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பங்கிருக்காது என்றே கருத்து தெரிவித்துள்ளனர்.

புல்லட் ரயில் திட்டத்துக்காக 50 ஆண்டுகால கடனை ஜப்பான் அளிக்கும் நிலையில் உற்பத்தியில் இந்திய நிறுவனங்களுக்கு பெரும் பங்கு இருப்பது கடினமே என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x