Published : 07 Nov 2023 05:24 PM
Last Updated : 07 Nov 2023 05:24 PM
போபால்: ”ஊழல் நடப்பதில் இருந்து தடுக்கப்பட்ட பணம், ஏழை மக்களுக்கு, விவசாய திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது" என மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், ”தினமும் என்னை தாக்கிப் பேசுவதற்கு காங்கிரஸ் ஒருபோதும் மறப்பதில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார். மத்திய பிரதேசத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றது. இந்த ஆண்டு எப்படியாவது ஆட்சியை தக்கவைத்து கொள்ள பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நவம்பர் 17-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் தினமும் என்னைத் தாக்கி பேசுவதற்கு ஒருபோதும் மறப்பதில்லை. பழங்குடியினத்தை சேர்த்த பெண்ணை குடியரசுத் தலைவராக ஏற்க மறுத்த காங்கிரஸ்தான், அவர்களின் நலனுக்காக பாடுபடுவதாக கண்துடைப்பு செய்கிறது.
வாக்கு வங்கி அரசியலில் மட்டுமே காங்கிரஸ் கட்சியினர் அதிக கவனம் செலுத்துகிறார்கள், பட்டியலின மக்களின் நலன் மீது அல்ல. நாட்டின் முதல் பழங்குடியின முதன்மை தகவல் ஆணையரின் (சிஐசி) பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளவில்லை. இதற்கும் முன்கூட்டியே அழைப்பும் விடுக்கப்பட்டது. ஊழல் நடப்பதில் இருந்து தடுக்கப்பட்ட பணம் ஏழை மக்களுக்கு விவசாய திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்காக விஸ்வகர்மா திட்டத்தின்கீழ் 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது” என்று பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT