Published : 07 Nov 2023 03:36 PM
Last Updated : 07 Nov 2023 03:36 PM

பட்டாசுக்கு கட்டுப்பாடு | சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி தீபாவளி கொண்டாட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தீபாவளி கொண்டாட்டம் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தீபாவளியை கொண்டாடும் நோக்கில் பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், அதை மீறும் வகையில் ராஜஸ்தானில் பட்டாசு வெடிக்கப்படுவதாகவும், இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு மோசடைவதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது "கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும்; அதேநேரத்தில் அது மிதமானதாகவும் இருக்க வேண்டும். கொண்டாட்டங்கள் மூலம் ஒருவர் மற்றவர்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம், ஆனால், அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது" என நீதிபதி எம்எம் சுந்தரேஷ் தெரிவித்தார்.

"பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதால், சிறுவர்கள் அதிகமாக பட்டாசுகளை வெடிப்பதில்லை. ஆனால், வயது வந்தவர்கள்தான் அதிக அளவில் பட்டாசுகளை வெடிக்கிறார்கள். இரவு 10.30 மணி வரை பட்டாசுகளை வெடிக்கலாம் என அனுமதி அளித்தால், இரவு 10 மணி வரை பட்டாசுகளை வெடித்து முழுமையாக காலி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது" என நீதிபதி போபண்ணா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "சமூகத்தில் உள்ள அனைவருக்கும் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். அதன்மூலம் தான் இதுபோன்ற விஷயங்களில் தீர்வு காண முடியும். குறைவாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அனைவரும் நினைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சுற்றுச்சூழல் விஷயத்தில் அரசு தனக்கு இருக்கும் பொறுப்புணர்வை தவிர்த்து விட முடியாது. சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், "தீபாவளியை முன்னிட்டு காற்று மற்றும் ஒலி மாசு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். திருவிழாக் காலங்களில் மட்டுமல்ல; மற்ற நேரங்களிலும்கூட அரசு இதனை கருத்தில் கொள்ள வேண்டும். இது ராஜஸ்தானுக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்" என்று உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x