Published : 07 Nov 2023 05:38 AM
Last Updated : 07 Nov 2023 05:38 AM

சத்தீஸ்கர், மிசோரமில் இன்று வாக்குப்பதிவு

கோப்புப்படம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர், மிசோரமில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 40.78 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்காக 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நடைபெறும் 20 தொகுதிகளில் 12 தொகுதிகள் நக்ஸல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இதன்காரணமாக அந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் 600 வாக்குச் சாவடிகளில், சுமார் 60,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் 40,000 பேர் சிஆர்பிஎப் வீரர்கள் ஆவர்.

நேரம் மாற்றம்: தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக வாக்குப்பதிவு நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நக்ஸல் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் காலை 7 மணி முதல் 3 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதர பகுதிகளில் வழக்கம்போல காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் சத்தீஸ்கரின் கன்கர், பிஜாபூர் பகுதிகளில் நக்ஸல் தீவிரவாதிகள் நேற்று கண்ணிவெடி தாக்குதல்களை நடத்தினர். இதில் 2 போலீஸார் படுகாயமடைந்தனர். நாராயண்பூர் பகுதியில் 4 கிலோ வெடிபொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டமாக வரும் 17-ம் தேதி 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல்நடக்கிறது. அந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

ஒரே கட்ட தேர்தல்: மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இந்த தொகுதிகளில் 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 8.57 லட்சம் பேர் வாக்குரிமைபெற்றுள்ளனர். அவர்களுக்காக 1,274 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள 30 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுஉள்ளன. மாநில போலீஸார் மற்றும்மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த 9,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மியான்மருடன் 510 கி.மீ., வங்கதேசத்துடன் 318 கி.மீ. எல்லையை மிசோரம் மாநிலம் பகிர்ந்து கொண்டிருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி மிசோரமின் சர்வதேச எல்லைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளன.

மிசோரமில் ஆளும் தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் முன்னணி, காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பாஜக சார்பில் 23 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x