Published : 06 Nov 2023 04:58 AM
Last Updated : 06 Nov 2023 04:58 AM
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதால் தொடக்கப் பள்ளிகளுக்கு நவ.10-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வாகனங்கள் நுழையவும், கட்டுமான பணிகள் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே காற்று மாசு அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், பலருக்கும் மூச்சுத் திணறல் உட்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இந்தநிலையில், மாணவர்கள் நலன்கருதி, டெல்லி முழுவதும் தொடக்கப் பள்ளிகளுக்கு நவ.10-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி கல்வித் துறை அமைச்சர் அதிஷி கூறியபோது, ‘‘தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொடக்கப் பள்ளிகளை நவ.10-ம் தேதி வரை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தஅறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்
முன்னதாக, டெல்லியில் காற்றுமாசு மோசமான அளவை எட்டியதை அடுத்து, அனைத்து அரசுமற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கு கடந்த 3-ம் தேதி விடுமுறை விடப்படுவதாக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்தார். இந்த சூழ்நிலையில், காற்று மாசு மேலும் கடுமையான அளவில் மோசமாகி ‘சிவியர் பிளஸ்’ என்ற நிலையை எட்டியதை தொடர்ந்து, பள்ளிகளுக்கு நவ.10வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரக் குறியீடு (Air Quality Index – AQI) கடந்த 4-ம் தேதி மாலை 4 மணிக்கு 415 ஆக இருந்த நிலையில், நேற்று (5-ம் தேதி) காலை 7 மணிக்கு 460 ஆகமோசமடைந்தது.
டெல்லியின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காற்றில் தூசு, துகள்செறிவு பிஎம்2.5 என்ற அளவில் காணப்படுகிறது. இந்த அளவுக்குமாசடைந்த காற்றை தொடர்ச்சியாக சுவாசித்தால், அது சுவாசமண்டலத்தில் ஆழமாக ஊடுருவி பல்வேறு உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும். உலக சுகாதார அமைப்பு மற்றும் அரசு பரிந்துரைத்துள்ள பாதுகாப்பான வரம்பைவிட, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அளவு பலமடங்கு மோசமான நிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் நெல் அறுவடை பணிகள் முடிந்து அதன் கழிவுகளை எரிப்பது அதிகரித்து வருகிறது. இந்தசூழலில், காற்று வீசுவதில் ஏற்பட்டுள்ள மாறுபாடு, வெப்பநிலை ஆகியவையும் டெல்லியில் காற்றின் தரத்தை கடுமையாக பாதித்து வருகின்றன.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகளின்படி, கடந்த அக்.27 முதல் நவ.3-ம் தேதி வரைடெல்லியில் காற்றின் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 3-ம் தேதி காற்றின் தரக் குறியீட்டு அளவு 450-க்கு மேல் அதிகரித்து, மிக மோசமான அளவாக ‘சிவியர் பிளஸ்’ என்ற நிலையை எட்டியுள்ளது.
அண்டை நகரங்களும் பாதிப்பு: கடந்த 2021 நவ.12-ம் தேதி டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 471 ஆக அதிகரித்ததுதான் இதுவரை மிகவும் மோசமான அளவாககருதப்படுகிறது. அதன்பிறகு, கடந்த 3-ம் தேதிதான் இந்த குறியீடு24 மணிநேர சராசரி அளவாக 468-ஐ தொட்டது. அண்டை நகரங்களான காசியாபாத் (410), குருகிராம் (441), நொய்டா (436), கிரேட்டர் நொய்டா (467), பரீதாபாத் (461), டெல்லி பல்கலைக்கழகம் (456), லோதி சாலை (385) ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் அபாயகரமான நிலையில்தான் உள்ளது.
மருத்துவர்கள் கூற்றுப்படி,ஆரோக்கியமான உடல்நலனுக்காக பரிந்துரைக்கப்படும் காற்றின் தரக் குறியீடு என்பது 50-க்கும் குறைவாகவே இருக்க வேண்டும். ஆனால், தற்போது டெல்லியில் கடந்த சில நாட்களில் காற்றின் தரக் குறியீடு அளவு அதைவிட பல மடங்கு அதிகரித்து, 400-ஐ தாண்டியுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அளவிலான காற்றின் தரம் மிகஆபத்தானது. நுரையீரல் புற்றுநோய் அபாயத்தைகூட இது ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்தியஅரசு பல்வேறு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் அல்லது சேவைகளைவழங்கும் லாரிகள், இலகுரகவாகனங்கள் தவிர, மற்ற வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள், மின் பகிர்மானம், குழாய்பதித்தல் போன்ற பொது திட்டங்கள், கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளும் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன.
‘உலக மாசு’ பட்டியலில்.. சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஐக்யூ அமைப்பு, காற்றின் தரத்தை மதிப்பீடு செய்து மிக மோசமான அளவில் காற்று மாசு நிலவும் நகரங்களை பட்டியலிட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, டெல்லிஇப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவின் கொல்கத்தா, மும்பை மட்டுமின்றி,லாகூர், கராச்சி (பாகிஸ்தான்), தாகா(வங்கதேசம்) ஆகிய நகரங்களும் இப்பட்டியலில் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT