Published : 05 Nov 2023 04:52 PM
Last Updated : 05 Nov 2023 04:52 PM

சாதிவாரி கணக்கெடுப்பு முதல் கடன் தள்ளுபடி வரை: சத்தீஸ்கர் மக்களுக்கான காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி

தேர்தல் அறிக்கையை வெளியிடும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்

ராய்ப்பூர்: வரும் 7 ஆம் தேதி தொடங்கி இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் சத்தீஸ்கர் மாநில மக்களுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டது. அதில் சாதிவாரி கணக்கெடுப்பு முதல் விவசாயக் கடன் தள்ளுபடி வரை பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. எல்கேஜி முதல் பிஜி (முதுநிலை) வரை இலவச கல்வி என்ற வாக்குறுதியையும் வழங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகல் ராஜ்நந்த்கானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்துப் பேசிய முதல்வர், "மாநிலத்தில் உள்ள பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பொதுப்பிரிவினர் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசியல் ஆதாயம் பெற உதவுவதோடு மட்டும் இல்லாமல், அவர்களுக்கான சமூக மற்றும் பொருளாதா நலன்களை வழங்க அரசு சிறப்புத் திட்டங்களை தீட்டவும் உதவும்" என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் வாக்குறுதிகள்: சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வழங்கியுள்ள வாக்குறுதிகளில் சில:

  • நெல் குவிண்டால் ரூ.3,200க்கு கொள்முதல்.
  • சமையல் கேஸ் ரூ.500 விலைக்கு விற்பனை.
  • முதல்வரின் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 17.5 லட்சம் பேருக்கு இலவச வீடு.
  • எல்கேஜி முதல் பிஜி (முதுநிலை) வரை இலவச கல்வி.
  • குப்சந்த் பாகல் ஸ்வஸ்யக சாகயதா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
  • தற்போது நடைமுறையில் இருக்கும் 40 சதவீதத்துக்கு பதிலாக 50 சதவீதம் வரை வணிகர்களுக்கு கடன் தள்ளுபடி. இதுபோல 20 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாஜக வாக்குறுதி: உள்துறை அமைச்சர் அமித் ஷா ராய்ப்பூரில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இரண்டு நாட்கள் கழித்து காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கை இன்று வெளியிட்டுள்ளது. முன்னதாக, ‘மோடி கி கியாரண்டி 2023’என்று தலைப்பிடப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சைக்கான சுகாதார காப்பீடு, மலிவு விலையில் மருந்துகளை பெரும் வகையில் புதிதாக 500 ஜன் அவுஷாதி மையங்கள் நிறுவுதல், கூடுதலாக பீடி இலை சேகரிப்பவர்களுக்கு ரூ.4,500 போனஸ் உள்ளிட்டவைகள் அடங்கும்.

இரண்டு கட்டத்தேர்தல்: சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு நவ.7 மற்றும் 17 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. டிசம்பர் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். முதல் கட்டத்தில் 20 தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டத்தில் 70 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவுகள் நடக்க இருக்கின்றன. தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் பதவிக்காலம் அடுத்தாண்டு (2024) ஜனவரி 3ம் தேதியுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x