Published : 05 Nov 2023 02:52 PM
Last Updated : 05 Nov 2023 02:52 PM

2024 தேர்தலில் எல்லா தடைகளையும் உடைத்து மக்கள் பாஜகவை ஆதரிப்பர் - பிரதமர் மோடி

புதுடெல்லி: 2024 தேர்தலில் எல்லா தடைகளையும் உடைத்து மக்கள் பாஜகவை ஆதரிப்பார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று (சனிக்கிழமை) அவர் தனியார் ஊடகம் ஒருங்கிணைத்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ”இந்தியா எல்லாத் தடைகளையும் உடைத்துவிட்டது. உண்மையிலேயே இருந்த தடைகளும், ஊதிப் பெரிதுபடுத்தப்பட்ட தடைகளும் கடந்த 10 ஆண்டுகளில் தகர்க்கப்பட்டுவிட்டன. இப்போது தேசம் 2047-ல் வளர்ந்த நாடாக உருவாகும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. வாரிசு அரசியலும் குடும்ப அரசியலும் தான் நாட்டின் வளர்ச்சிக்கு உண்மையான தடைகளாக இருந்தன. ஆனால் பாஜக அரசு அதனை முடிவுக்குக் கொண்டுவந்தது. இப்போது சாமானியர்கள் தங்களிடம் கூடுதல் அதிகாரம் இருப்பதாக உணர்கிறார்கள்.

வறுமை ஒழிப்பில் பாஜக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. அரசின் கொள்கைகளால் நடுத்தர வர்க்கம் அதிகரித்துள்ளது. மாத வருமானம் பெறுவோரின் வருவாய் அதிகரித்துள்ளது.

இன்று இந்தியா நிலவில் வரலாற்று சிறப்புமிக்கு தடத்தைப் பதித்துள்ளது. ஜி20 உச்சி மாநாட்டை நடத்தியுள்ளது. செல்போன் ஏற்றுமதியிலும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையிலும் மிளிர்கிறது. நாட்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2023ல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இருமடங்காக அதிகரித்துள்ளது. அன்றாடம் அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை தூரத்தின் அளவு 12 கிலோ மீட்டரில் இருந்து 30 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. செயல்பாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 70ல் இருந்து 150 ஆக அதிகரித்துள்ளது. 2014 வரை நாட்டில் இருந்த ரயில் இருப்புப் பாதையின் தூரம் வெறும் 20 ஆயிரம் கிலோ மீட்டர். இப்போது அது 40 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அங்கு பயங்கரவாதம் அழிந்து சுற்றுலா மேம்பட்டு வருகிறது. ஆகையால், 2024 தேர்தலில் எல்லா தடைகளையும் உடைத்து மக்கள் பாஜகவை ஆதரிப்பர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x