Published : 24 Jan 2018 10:58 AM
Last Updated : 24 Jan 2018 10:58 AM
பத்மாவத் திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து நேற்றிரவு (செவ்வாய் இரவு) அகமதாபாத்தில் கர்னி சேனா அமைப்பினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலில், பத்மாவத் திரைப்படத்துக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்துவதாகவே கூறினர். ஊர்வலம் அமைதியாக நடந்துகொண்டிருந்தபோதே திடீரென வன்முறை வெடித்தது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பத்மாவத்' திரைப்படத்தில், ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கர்னி சேனா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த திரைப்படம், வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கு ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் திரையிட தடை விதித்தன. இந்த 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், மாநில அரசுகளின் இந்தத் தடையை, உச்ச நீதிமன்றம் நீக்கியது. 'பத்மாவத்' படத்திற்கு வழங்கப்பட்ட திரைப்பட தணிக்கை வாரிய சான்றிதழை ரத்து செய்யக்கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், 'பத்மாவத்' படத்திற்கு தடை விதிக்கக் கோரி, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
எனவே, படம் நாளை திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், பத்மாவத் திரைப்படத்துக்கு எதிர்ப்பு நிலவும் குஜராத் மாநிலத்தில் உள்ள 10 மல்டிபிளக்ஸுகளுக்கு அரசு போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருந்தது.
இருந்தாலும், வன்முறை சம்பவங்கள் நிகழலாம் என்ற அச்சத்தில், பல திரையரங்குகள் பத்மாவத்தை திரையிட முன்வரவில்லை.
இந்நிலையில், பத்மாவத் திரைப்படத்துக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்திய கர்னி சேனா அமைப்பினர் திடீரென திரையரங்குகளை அடித்து நொறுக்கியும் அதன் வாயில்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார் ஆகியனவற்றிற்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இது குறித்து குஜராத் உள்துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா, "சில சமூக விரோத சக்திகள் இந்த வன்முறைக்கும் பின்னால் உள்ளன. அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT