Published : 04 Nov 2023 05:16 PM
Last Updated : 04 Nov 2023 05:16 PM
ராய்ப்பூர்: “பிரதமர் மோடிக்கு துபாய் மக்களுடன் இருக்கும் எந்தத் தொடர்பு மஹாதேவ் செயலியைத் தடை செய்வதையும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதையும் தடுக்கிறது?” என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்ட விரோத விளையாட்டுச் செயலி விவகாரத்தில் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், “நமக்கு துபாய் மக்களுடன் என்ன உறவு இருக்கிறது என்று பிரகமர் மோடி கேட்கிறார். துபாய் மக்களுடன் அவருக்கு என்ன மாதிரியான உறவு இருக்கிறது? லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்ட பின்னரும் ஏன் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்வது இந்திய அரசின் கடமை" என்று தெரிவித்தார்.
முன்னதாக, இன்னும் சில நாட்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் சனிக்கிழமை பேசிய பிரதமர் மோடி, சூதாட்ட நிறுவனத்திடம் ரூ.508 கோடியை பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சாடினார். அவர் கூறுதையில், “சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு உங்களைக் கொள்ளையடிக்க எந்த வாய்பையும் விட்டுவைக்கவில்லை. அவர்கள் மஹாதேவ் என்ற பெயரையும் விட்டுவைக்கவில்லை" என்றார்.
பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், "மஹாதேவ் செயலி ஏன் இன்னும் தடை செய்யப்படவில்லை? அதனைத் தடை செய்வது இந்திய அரசின் கடமை. நான் பிரதமரிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்... உங்களுக்கும் அவர்களுடன் என்னத் தொடர்பு உள்ளது? அப்படி எந்தத் தொடர்பும் இல்லையென்றால், ஏன் இன்னும் அந்த செயலியைத் தடைசெய்யவில்லை?" என்று கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.
மேலும் அவர், "இவர்களால் எப்போதும் நேரடியாக மோத முடியாது. மோதவும் மாட்டார்கள். அதனால்தான் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை மூலமாக தேர்தல் களத்தில் மோதுகிறார்கள். எந்த விதமான விசாரணையும் செய்யாமல் அவர் (பிரதமர் மோடி) குற்றம்சாட்டுகளை வைக்கிறார். அமலாக்கத் துறையினரும், வருமான வரித் துறையினரும் இங்கே சுற்றித் திரிகிறார்கள். இது உங்கள் மீது மதிப்பு இல்லாததைக் காட்டுகிறது" என்று தெரிவித்தார்.
முன்னதாக, சட்டவிரோத பந்தயங்களை ஊக்குவிக்கும் மஹாதேவ் என்ற செயலி நிறுவனத்திடம் இருந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.508 கோடி பெற்றதாக அசிம் தாஸ் என்ற பணப் பரிமாற்றம் செய்பவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றிருப்பதாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.
இந்தக் குற்றச்சாட்டினை திட்டவட்டமாக மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, “இது பூபேஷ் பாகலின் புகழைக் கெடுக்கும் ஒரு தெளிவான சதிச் செயல், மக்கள் இதற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்தது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால் மற்றும் அபிஷேக் சிங்வி கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...