Published : 04 Nov 2023 04:30 PM
Last Updated : 04 Nov 2023 04:30 PM

ராமர் கோயில் திறப்பு: ஆர்எஸ்எஸ் அகில இந்திய செயற்குழு கூட்டத்தில் நாளை ஆலோசனை

குறியீட்டுப் படம்

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் இந்திய செயற்குழு கூட்டம் நாளை முதல் வரும் 7-ம் தேதி வரை குஜராத் மாநிலம் புஜ் நகரில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஜனவரி 22, 2024 அன்று அயோத்தியில் ராமர் கோயிலில் நடைபெறவுள்ள கும்பாபிஷேகம் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் சுனில் அம்பேத்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்எஸ்எஸ் வருடாந்திர அகில இந்திய செயற்குழு கூட்டம் நவம்பர் 5 முதல் நவம்பர் 7 வரை குஜராத் மாநிலம் புஜ்-ல் நடைபெறுகிறது. இதில் பல்வேறு மாநிலத் தலைவர்கள், துணை தலைவர்கள், மாநில செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபாலே, துணை பொதுச் செயலாளர் D கிருஷ்ணகோபால், டாக்டர் மன்மோகன் வைத்யா, முகுந்தா, அருண் குமார், ராம்தத் சக்ரதார் மற்றும் அனைத்து அகில இந்திய பொறுப்பாளர்களும் பங்கேற்பார்கள். விஸ்வ ஹிந்து பரிஷத், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், பாரதிய ஜனதா கட்சி, பாரதீய மஸ்தூர் சங்கம், பாரதீய கிசான் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் அகில இந்திய அமைப்பாளர்களும் இதில் பங்கேற்பார்கள்.

இந்த கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் வேலைகள் குறித்த ஆய்வு மற்றும் கடந்த செப்டம்பரில் புனேவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ்-ன் பல்வேறு அமைப்புகளின் கூடுதலில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஆர்எஸ்எஸ் தலைவரின் விஜயதசமி உரையில் இடம்பெற்ற விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். சமுதாயத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றதாக ஆர்எஸ்எஸ் வேலைமுறைகளில் தேவையான மாற்றங்கள், உதாரணமாக சங்கத்தின் முதலாமாண்டு முகாம் இரண்டாம் ஆண்டு முகாம், மூன்றாம் ஆண்டு முகாம்களில் 2024 முதல் புதிய பாடத்திட்டங்கள் அமல் செய்யப்படும்.

ஜனவரி 22, 2024 அன்று அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும்போது, நாட்டின் ஒவ்வொரு கிராமம், நகரங்களில் உள்ள கோயில்களில் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்படும். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ்-ன் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். பின்னர் இந்த தகவல், அனைத்து ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கும் அளிக்கப்படும், அதன் மூலம் இதில் சமுதாயமும் பங்கேற்க வழி ஏற்படும்.

டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவாரால் 1925-ல் துவக்கப்பட்ட ஆர்எஸ்எஸ், 98 ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 2025-ம் ஆண்டு நூற்றாண்டு வருவதையொட்டி, ஆர்எஸ்எஸ் அமைப்பை மேலும் விரிவுப்படுத்த வேலைகள் நடந்து வருகின்றன. பலர் தங்கள் நேரத்தை கொடுக்க முன்வந்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முழுமையாக ஆர்எஸ்எஸ் வேலை செய்ய பலர் முன்வந்துள்ளனர். இதை மையமாக வைத்து, தீர்மானிக்கப்பட்ட ஷாகா(கிளை) இலக்குகளின் நிலை குறித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய ஏற்கனவே யோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் இது குறித்த ஆய்வு மற்றும் அடுத்த ஒன்றரை வருடங்களில் அந்த இலக்குகளை அடைவது எப்படி என்பது குறித்தும் விவாதிக்கப்படும். இதுவரை நடந்துள்ள வேலைகள், மேலும் எவ்வாறு துரிதப்படுத்துவது போன்றவையும் விவாதிக்கப்படும். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவின் போது, அது பற்றிய புரிதலை சமுதாயத்தின் முன் எப்படி எடுத்துச் செல்வது என்பதும் ஆலோசிக்கப்படும்.

தனது விஜயதசமி உரையில், ஆர்எஸ்எஸ் தலைவர் ஷாகா நடைபெறும் இடத்தை சுற்றி சமுதாய மாற்றம் ஏற்படுத்த வலியுறுத்தினார். சமூக ஒற்றுமை, சுற்றுசூழல் பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பு, பிளாஸ்டிக் தவிர்த்தல் மேலும் உதாரண குடும்பமாக வாழ்வது எப்படி என்று பேசினார். அத்துடன் சுதேசி, சமூக கடமை போன்றவற்றை ஸ்வயம்சேவகர்கள் தாங்கள் கடைபிடித்து, ஒரு உதாரணமாக இருந்து சமுதாயத்தையும் ஈடுபடுத்த வேண்டும் என்று பேசினார். நாடு முழுவதிலும் இருந்து மொத்தமாக 381 பொறுப்பாளர்கள் இந்த செயற்குழுவில் பங்கேற்பார்கள். ஆர்எஸ்எஸ் வேலைகள் பற்றி விவாதிக்கும் போது, நடைமுறையில் சந்திக்கும் விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். நவம்பர் 5ம் தேதி காலை 9 மணிக்கு கூட்டம் துவங்கி, நவம்பர் 7ம் தேதி மாலை 6 மணிக்கு நிறைவடையும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x