Published : 04 Nov 2023 11:28 AM
Last Updated : 04 Nov 2023 11:28 AM

அபாய கட்டத்தில் காற்றின் தரம்: மாசுபாட்டை கண்காணிக்க 500 குழுக்கள் அமைத்தது டெல்லி மாநகராட்சி

கோப்புப்படம்

டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காற்றின் தரம் மிகவும் மோசமானதாக மாறியிருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தரவுகளின் படி, ஆனந்த் விகாரில் காற்றின் தரக் குறியீடு 448 ஆகவும், ஜஹாங்கீர்புரியில் 421 ஆகவும், துவாரகாவில் 435 ஆகவும், இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையப் பகுதியில் 421 ஆகவும் இருந்தது.

காற்றின் தரக்குறியீடு 0 - 50 வரை இருந்தால் காற்றின் தரம் நல்ல நிலையில் இருக்கிறது. 51 - 100 வரை இருந்தால் திருப்திகரமாக இருக்கிறது. 101 - 200 வரை இருந்தால் சற்று மிதமாக இருக்கிறது. 201 - 300 வரை இருந்தால் இறுக்கமாக இருக்கிறது. 301 -400 வரை இருந்தால் மிகவும் இறுக்கமாக இருக்கிறது. 401 -500 வரை இருந்தால் கடுமையானதாக இருக்கிறது. 500க்கு மேல் இருந்தால் மிகவும் கடுமையானதாக இருக்கிறது

இதனிடையே, டெல்லி மாநகராட்சி, அதன் குளிர்கால செயல்திட்டத்தின் கீழ், திறந்தவெளியில் கழிவுகளை எரித்தல், சட்டவிரோதமான கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் இடித்தல், சாலைகளில் குப்பைகளைக் கொட்டுதல் போன்றவைகளை கண்காணித்துக் கட்டுப்படுத்த 1,119 அதிகாரிகள் அடங்கிய 517 குழுக்களை வெள்ளிக்கிழமை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காற்றுத்தர மேலாண்மை ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டும் என்றும் மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று 24 மணி நேரத்துக்கான சராசரி காற்றின் தரக்குறியீடு மிகவும் கடுமையான நிலையில் இருந்ததது. இது டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் காற்று மாசுகளை ஏற்படுத்தும் லாரி, வணிக ரீதியிலான நான்கு சக்கர வாகன போக்குவரத்து, அனைத்து வகையான கட்டுமான பணிகளை தடை செய்தல் என்ற அவசர நிலையை அமல்படுத்துவதற்கு சமமானது.

தேசிய தலைநகரில் கடந்த 2021-ம் ஆண்டு நவ.21-ம் தேதிக்கு பின்னர் சராசரி காற்றின் தரம் நேற்று 471 என்ற மிகவும் கடுமையான நிலையை எட்டியுள்ளது.

தேசிய தலைநகர் பகுதிகளில் தொடர்ந்து 5-வது நாளாக கடுமையான மற்றும் அடர்த்தியான பனிப்பொழிவு நிலவியதால் பி.எம்.2.5 நுண்ணிய துகள்களின் அடர்த்தி சுவாச மண்டலத்தை ஊடுருவி நோய்களை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகரித்திருந்தது. அதாவது ஒரு கனசதுர மீட்டருக்கு 60 மைக்ரோ கிராம் என்ற பாதுகாப்பான அளவை விட7,8 மடங்கு அதிகமாக இருந்தது.

இந்தநிலையில் டெல்லி பகுதிகளில் காற்று சுத்திகரிப்பான் மற்றும் முகக்கவசத்துக்கான தேவைகள் அதிகரித்திருப்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒருவாரத்தில் மாலை 4 மணி பதிவு படி தேசிய தலைநகர் டெல்லியின் 24 மணி நேரத்துக்கான சராசரி காற்றுத் தரக்குறியீடு வியாழக்கிழமை 392, புதன்கிழமை 364, செவ்வாய்க்கிழமை 359, திங்கள் கிழமை 347, கடந்த ஞாயிற்றுக்கிழமை 325, சனிக்கிழமை 304, வெள்ளிக்கிழமை 261 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x