Published : 03 Nov 2023 05:28 PM
Last Updated : 03 Nov 2023 05:28 PM

“சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக எதிர்க்கவில்லை” - அமித் ஷா

ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா

ராய்ப்பூர் (சத்தீஸ்கர்): சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக எதிர்க்கவில்லை என்றும், அது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தேர்தல் அறிக்கை தலைநகர் ராய்ப்பூரில் வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளோம். இது வெறும் தேர்தல் அறிக்கை மட்டுமல்ல; இது எங்களின் தீர்மானம். பாஜக ஆட்சிக்கு வந்ததும் அடுத்த 5 ஆண்டுகளில் சத்தீஸ்கரை முழுமையாக வளர்ச்சி பெற்ற மாநிலமாக நாங்கள் மாற்றிக் காட்டுவோம்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருப்பது குறித்து கேட்கிறீர்கள். முதல்வர் பூபேஷ் பெகலைவிட பொய்யான விளம்பரங்களைக் கொடுப்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அவர் எப்படி வேண்டுமானாலும் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கலாம். அதற்கேற்பவே சமூகச் சூழலை அவர் சத்தீஸ்கரில் ஏற்படுத்தி இருக்கிறார். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்துள்ளது. ஊழல் இல்லாத அரசை அவர் வழங்கி இருந்தால், இதுபோன்ற தள்ளுபடிகளுக்குத் தேவை இருந்திருக்காது. மக்கள் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் வாக்குகளை செலுத்துகிறார்கள். பாஜக ஆட்சியில், சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. சட்டம் - ஒழுங்கு நன்கு பேணப்பட்டது. மக்கள் இதை அறிவார்கள்.

காங்கிரஸ் வெற்றி பெற்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். நாங்கள் அதுபோன்ற வாக்கு வங்கி அரசியலை மேற்கொள்ள விரும்பவில்லை. நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை. இது குறித்து விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டு முடிவு எடுக்கப்படும். ஒரு ஏக்கருக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3100 என்ற அளவில் நெல் கொள்முதல் செய்யும் 'கிருஷி உன்னதி யோஜனா' திட்டத்தை பாஜக தொடங்கும். திருமணமான அனைத்து பெண்களுக்கும் ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகளை உருவாக்குவோம், சத்தீஸ்கரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் தூய நீர் விநியோகிப்போம். நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும். சத்தீஸ்கரில் 500 எண்ணிக்கையில் மத்திய அரசு மருந்தகங்கள் ஏற்படுத்தப்படும்.

அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்வதில் வெளிப்படைத் தன்மை உறுதிப்படுத்தப்படும். கேஸ் சிலிண்டர்களின் விலை ரூ.500-க்கு வழங்குவோம். மாணவர்கள் கல்லூரி செல்ல பயணப்படி வழங்குவோம். காங்கிரஸைப் பொறுத்தவரை கொள்கைகளை வகுப்பார்கள். ஆனால், அதனால் பயன் இருக்காது. பொருளாதாரம் உயராது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தனிநபர்களின் பொருளாதாரம் உயரும் வகையில் கொள்கைகளை செயல்படுத்துவோம்" என்று அமித் ஷா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x