Published : 03 Nov 2023 03:51 PM
Last Updated : 03 Nov 2023 03:51 PM

“காங்கிரஸ் 70 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் இருந்திருந்தால் மோடி பிரதமராகி இருக்க முடியாது” - கார்கே

மல்லிகார்ஜுன் கார்கே | கோப்புப் படம்

ராய்ப்பூர் (சத்தீஸ்கர்): “நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, எதுவும் செய்யாமல் இருந்திருந்தால் நரேந்திர மோடி பிரதமராக ஆகி இருக்க முடியாது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பதிலளித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். நாட்டின் வளர்ச்சியை காங்கிரஸ் பின்னுக்குத் தள்ளிவிட்டதாக அவர் குற்றம்சாட்டி வருகிறார். காங்கிரஸ் இல்லா இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், பிரதமரின் இத்தகைய பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பதிலளித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சத்தீஸ்கர் மாநில தலைநகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மல்லிகார்ஜுன் கார்கே, "பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 70 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். காங்கிரஸ் எதையும் செய்யாமல் இருந்திருந்தால், நரேந்திர மோடி பிரதமராக ஆகி இருக்க முடியாது. அமித் ஷா உள்துறை அமைச்சராக ஆகி இருக்க முடியாது. இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாத்தவர்கள் நாங்கள். அதனால்தான் நீங்கள் தற்போது இத்தகைய பதவிகளில் அமர முடிகிறது.

கடந்த 5 ஆண்டுகளாக பூபேஷ் பெகல் தலைமையிலான அரசு சத்தீஸ்கரில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. எதையும் செய்யாமல் நாங்கள் ஓட்டு கேட்க வரவில்லை. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை கொண்டு வந்தோம். உணவு பாதுகாப்புக்கான சட்டத்தைக் கொண்டு வந்தோம். ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக அரசுப் பள்ளிகளைக் கொண்டு வந்தோம். தற்போது நீங்கள் பார்க்கும் எதுவும் பிரதமர் மோடியால் வந்தது அல்ல.

சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த நரேந்திர மோடியும், அமித் ஷாவும் பொய்களைச் சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயன்றனர். கர்நாடகாவிலும் அப்படித்தான் செய்தனர். ஆனால், அம்மாநிலத்தில் இருந்த 40% ஊழல் பாஜக அரசை நாங்கள் அகற்றினோம். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்தியில் உள்ள மோடி அரசு துன்புறுத்துகிறது. மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதியை முறையாக விடுவிப்பது கிடையாது. மோடி ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இது அவரது பணம் கிடையாது; மக்களின் வரிப்பணம்; அவர்களின் உரிமைப் பணம்.

நாட்டின் மிகப் பெரிய தொழிற்சாலைகள் பலவற்றை தொடங்கிய கட்சி காங்கிரஸ். ஆனால், பிரதமர் மோடியோ செல்லும் இடங்களில் எல்லாம் மிகப் பெரிய பொய்களின் தொழிற்சாலையை திறந்து வைத்து வருகிறார். அவர் மக்களுக்கு நெருக்கமாகச் செல்வது கிடையாது. தூரத்தில் இருந்துதான் அவரை பார்க்க முடியும். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் அப்படி அல்ல. மக்களோடு மக்களாக வாழ்பவர்கள். உங்களுக்காக உழைப்பவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்" என்று கார்கே உரை நிகழ்த்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x