Published : 03 Nov 2023 03:08 PM
Last Updated : 03 Nov 2023 03:08 PM
புதுடெல்லி: டெல்லியில் காற்றின் தரம் இரண்டாவது நாளாக மோசமான அளவில் பதிவாகியியுள்ளது. அதிகரித்து வரும் காற்று மாசுபாடு குறித்து மத்திய அரசை டெல்லி மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கடுமையாக சாடியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கும். அதேபோல டெல்லியில் காற்றின் தரம் இரண்டாவது நாளாக மோசமான அளவில் பதிவாகியிருப்பதால் அங்குள்ள மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, பொதுமக்களுக்கு மூச்சுத்திண்றல் போன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காற்றின் தரம் இன்று 'கடுமையான' (severe plus) என்ற பிரிவுக்குச் சென்றுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400 புள்ளிகளைத் தாண்டி பதிவாகியுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 15 முதல் 20 நாள்கள் கடினமாக இருக்கும் என்று டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், “மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் (பூபேந்தர் யாதவ்) எங்கே? பாஜகவுக்கு எந்த ஒரு பொறுப்பும் இல்லையா? மாசுபாட்டை ஏற்படுத்தக்கூடிய லாரிகள், வணிகப் பயன்பாட்டுக்கான வாகனங்கள் நிறுத்தம் என டெல்லி அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மத்திய அரசும், எதிர்க்கட்சித் தலைவர்களும் இதுகுறித்து விவாதிக்க அவசரக் கூட்டம் நடத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT