Published : 03 Nov 2023 02:26 PM
Last Updated : 03 Nov 2023 02:26 PM

“உணவு பதப்படுத்துதல் துறை 9 ஆண்டுகளில் ரூ.50,000 கோடி அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது” - பிரதமர் மோடி பெருமிதம்

கோப்புப் படம்

புதுடெல்லி: இந்திய உணவு பதப்படுத்துதல் துறை கடந்த 9 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உலக உணவு இந்தியாவின் 2-வது மாநாடு (world food india 2023) புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (03.11.2023) நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் தொடக்க உரையை பிரதமர் மோடி இன்று ஆற்றினார். அப்போது அவர், "கடந்த ஒன்பது ஆண்டுகளில், ரூ.50,000 கோடி மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடு, உணவு பதப்படுத்தும் துறைக்கு வந்துள்ளது. இது அரசின் தொழில் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவான கொள்கைகளின் விளைவாகும்.

கடந்த 9 ஆண்டுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 150% அதிகரித்துள்ளது. உள்நாட்டு பதப்படுத்தும் திறன் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் உணவுப் பன்முகத்தன்மை ஒவ்வொரு உலக முதலீட்டாளருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு. நமது உணவுக் கலாச்சாரம் ஆயிரக்கணக்கான வருட பயணத்தின் விளைவு. உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்துக்கும் உணவு மிகப் பெரிய காரணி. சமச்சீரான உணவு, ஆரோக்கியமான உணவு, பருவத்துக்கு ஏற்ற உணவு ஆகியவை குறித்து ஆயுர்வேதம் பேசுகிறது என குறிப்பிட்டார்.

முன்னதாக, ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுய உதவி குழுக்களுக்கு ரூ. 380 கோடி நிதியை மூலதன நிதி உதவியாக பிரமதர் மோடி வழங்கினார். மேலும், 'உலக உணவு இந்தியா 2023'-ன் ஒரு பகுதியாக 'உணவு தெரு'வை பிரதமர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வு, இந்தியாவை ‘உலகின் உணவுக் கூடை’யாகக் காட்டுவதையும், 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. முதல் மாநாடு கடந்த 2017 ம் ஆண்டு நடைபெற்றது. கரோனா தொற்று காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெறவில்லை. இன்று தொடங்கி உள்ள இந்த மாநாடு 3 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 நாள் மாநாட்டில், முக்கிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்பட 80 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மாநாட்டின் மூலம், உணவு பதப்படுத்தும் துறை ₹75,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டை ஈர்க்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x