Published : 03 Nov 2023 08:52 AM
Last Updated : 03 Nov 2023 08:52 AM
புதுடெல்லி: கடந்த ஒரு வாரத்தில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.80 வரை உயர்ந்துள்ளது. இதை சமாளிக்க மத்தியப்பிரதேசத்தில் ரூ.25 க்கு இந்திய தேசிய கூட்டுறவு வாடிக்கையாளர்களின் கூட்டமைப்பு (என்சிசிஎப்) சார்பில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தக்காளியின் விலை அதிகமாக உயர்ந்து கிலோ ரூ.200 க்கும் மேல் விற்பனையானது. இந்த விலை உயர்விலிருந்து பொதுமக்கள் விடுபட்ட நிலையில் தற்போது வெங்காயத்தின் விலை உயரத் தொடங்கி உள்ளது. வட மாநிலங்களான குறிப்பாக டெல்லி, மத்தியப்பிரதேசம், பிஹார் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 வரை விற்பனையாகிறது.
இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிவிட்டனர். இன்னும் சில நாட்களில் தீபாவளிப் பண்டிகை வரும்நிலையில் இந்த வெங்காய விலை உயர்வு பொதுமக்களை பாதித்துள்ளது. இதை சமாளிக்க ம.பி.யில் என்சிசிஎப் சார்பில் வெங்காயம் சந்தைகளிலிருந்து நேரடியாக வரவழைக்கப்பட்டு கிலோ ரூ.25 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
குடியிருப்புப் பகுதிகளில் நிறுத்தி விற்கப்படும் வாகனங்களில் தலா ஒருவருக்கு 2 கிலோ வெங்காயம் மட்டுமே விற்கப்படுகிறது. உபி, பிஹார் உள்ளிட்ட இதர வட மாநிலங்களிலும் என்சிசிஎப் தனது மலிவான வெங்காய விலையை துவக்கத் தயாராகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’இணையத்திடம் போபாலின் கொரநாட் காய்கறி சந்தை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவரான முகம்மது நசீம் கூறும்போது, "காலநிலை மாற்றங்களால் ஒவ்வொரு வருடமும் இதுபோல் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வது வாடிக்கையாகி விட்டது.
தற்போது, மகராஷ்டிராவின் நாசிக் உள்ளிட்ட முக்கிய வெளிமாநில சந்தைகளிலிருந்து வெங்காயவரத்து மிகவும் குறைந்து விட்டன. சமீபத்தில் பெய்த மழை இதற்குக் காரணமாகிவிட்டது" எனத் தெரிவித்தார்.
இந்த வெங்காய விலை உயர்வால் குறிப்பாக சாலையோரம் சிறிய கடைகளை நடத்துபவர்களும், ஓட்டல் உரிமையாளர்களும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் அசைவ உணவு உண்பவர்களுக்கும் இந்த வெங்காய விலை பாதித்துள்ளது.
தக்காளி, வெள்ளரி, எலுமிச்சை, காரட் உள்ளிட்டவைகளுடன் உணவுக்கு முன்பான சாலட்டுகளில் வெங்காயத்தை பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது. வெங்காய விலை தீபாவளிக்கு பிறகே குறையத் துவங்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT