Published : 23 Jan 2018 10:50 AM
Last Updated : 23 Jan 2018 10:50 AM
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆட்சியர் ஆம்ரபாலிக்கும் ஐபிஎஸ் அதிகாரிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆம்ரபாலி (25). இவர் சென்னை ஐஐடியில் கட்டிட பொறியியல் படித்தார். அதன்பிறகு கடந்த 2009-ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி அடைந்தார். இதையடுத்து, தெலங்கானா மாநிலத்தில் புதிதாக உருவான வாரங்கல் மாவட்டத்தின் முதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். மாவட்டத்தில் இவரது சிறந்த பணிகளை பாராட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பல பரிசுகளை வழங்கி உள்ளார்.
இந்நிலையில், ஆம்ரபாலியும், டெல்லியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சமீர் ஷர்மாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீர் ஷர்மா இப்போது யூனியன் பிரதேசமான டையூ-டாமன் பகுதியில் எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் ஒப்புக்கொண்டதால், பிப்ரவரி 18-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் திருமணம் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 23-ம் தேதி வாரங்கலில் விருந்து நடத்தப்படுகிறது. இதையொட்டி, வரும் 28-ம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் ஆம்ரபாலி விடுமுறையில் செல்ல உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT