Published : 02 Nov 2023 01:10 PM
Last Updated : 02 Nov 2023 01:10 PM

கேள்விக்கு பணம் பெற்ற விவகாரம்: நெறிமுறைக் குழு விசாரணைக்கு ஆஜரானார் மஹுவா மொய்த்ரா

புதுடெல்லி: மக்களவையில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மக்களவை நெறிமுறைகள் குழு விசாரணைக்கு இன்று வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்.

பாஜக எம்பி வினோத் சோன்கர் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வி.வைத்தியலிங்கம், டானிஷ் அலி, சுனிதா துக்கல், அப்ராஜித சாரங்கி, பிரனீத் கவுர், ஸ்வாமி சுமிதானந்த் ராஜ்தீப் ராய் ஆகியோர் அடங்கிய மக்களவை நெறிமுறைக்குழு இன்று தங்களது விசாரணையைத் தொடங்கியது.

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்பி.,யான மஹுவா மொய்த்ரா, மக்களவையில் இதுவரை கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இந்த கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை மஹூவா மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் அண்மையில் அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் இதுகுறித்து புகார் அளித்தார். அவரது பரிந்துரையின் பேரில் இந்த விவகாரத்தை மக்களவை நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதன்படி பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோரிடம் அக்.26ம் தேதி விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. மஹுவா அக். 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது.

இதனிடையே துர்கா பூஜை நிகழ்ச்சிகளைக் காரணம் காட்டி நவ.5-ம் தேதிக்கு பின்னர் விசாரணைக்கு ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற மஹுவா நெறிமுறைக் குழு முன்பு வைத்தக் கோரிக்கையை நிராகரித்த விசாரணைக் குழு மஹுவா நவ.2-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்னதாக புதன்கிழமை நெறிமுறைக் குழுவுக்கு மஹுவா இரண்டு பக்க கடிதம் எழுதியிருந்தார். மஹூவா அதனைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார்.
அப்பதிவில், "எனக்கு அனுப்பும் சம்மன்களை ஊடகங்ளுக்கு பகிர்வது பொருத்தமாக இருக்கும் என மக்களவை நெறிமுறைக் குழு கருதுவதால், நாளை விசாரணைக்கு முன்பாக அக்குழுவுக்கு நான் எழுதிய கடிதத்தை வெளியிடுவது முக்கியமானது என நான் கருதுகிறன்" எனக் கூறியிருந்தார்.

அக்கடிதத்தில் அவர், "என் மீது குற்றஞ்சாட்டியுள்ள தொழிலதிபர் ஹிராநந்தானி மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ரா ஆகியோரிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையை மீண்டும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்தக் கோரிக்யை விசாரணைக்குழு ஏற்கிறதா இல்லையா என்பதை எழுத்துபூர்வமாக ஆவணமாக பதிவு செய்ய வேண்டும் என்றும் நான் குழுவிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று கோரியிருந்தார்.

மேலும், நவ.5ம் தேதிக்கு பின்னர் விசாரணைக்கு ஆஜராகிறேன் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது என்றும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் டானிஷ் அலியை தகாத வார்த்தைகளில் பேசிய பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரிக்கு நாடாளுமன்ற உரிமை மீறல் குழு அக்டோபர் 10-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பியது.

அதற்கு ராஜஸ்தான் தேர்தல் கூட்டங்கள் காரணமாக அவரது வேண்டுகோளின் பெயரில் பின்னர் ஒரு தேதியில் ஆஜராக அனுமதி அளிக்கப்பட்டது என்றும் கூறியிருந்த மஹுவா இச்செயலை இரட்டை நிலைப்பாடு என்றும், பிதுரி உதாரணம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதுபோன்ற செயல்கள் விசாரணைக் குழுக்கள் மீதான நம்பகத்தன்மையை மேம்படுத்துவதாக இல்லை என்றும் சாடியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x