Published : 02 Nov 2023 12:27 PM
Last Updated : 02 Nov 2023 12:27 PM
புதுடெல்லி: கடந்த 2008 -ல் அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று காங்கிரஸுக்கு எதிராக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். அசாதுதீன் ஒவைசி பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு பாஜக - காங்கிரஸ் நேரடியாக போட்டியிடும் எல்லாம் இடங்களும் ஒவைசி தனது கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்துகிறார் என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அவர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், "நீங்கள் அமேதி தொகுதியில் தானாக தோற்றீர்களா இல்லை பணம் பெற்றுக் கொண்டு தோற்றீர்களா" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் இந்தியில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் ஒவைசி, "ராகுல் காந்தி, கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின்போது அப்போதைய யுபிஏ அரசை ஆதரிக்க நாங்கள் எவ்வளவு பணம் பெற்றோம்? ஆந்திராவில் கிரண் குமார் ரெட்டி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டது? குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரனாப் முகர்ஜியை ஆதரிக்கும் பொருட்டு ஜெகன் மோகன் ரெட்டியை சமாதானப்படுத்த எனக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை நீங்கள் தோற்றுக்கொண்டுதான் இருக்கிறீர்கள் அதற்கு நான் பொறுப்பு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தெலங்கானாவில் புதன்கிழமை தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய வயநாடு எம்.பி. ராகுல் காந்தி,"அசாம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, திரிபுரா, என நாங்கள் எங்கு போட்டியிட்டாலும், காங்கிரஸ் - பாஜக நேரடி மோதல் நடக்கும் இடங்களில் எல்லாம் அசாதுதீன் ஒவைசி பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு அங்கு தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துகிறார்" என்று குற்றம்சாட்டியிருந்தார்.
அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி அசாம், திரிபுராவில் போட்டியிடவில்லை. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறது.
தெலங்கானா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இந்தமாதம் 30-ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிகை டிச.3-ம் தேதி நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT