Published : 15 Jul 2014 04:47 PM
Last Updated : 15 Jul 2014 04:47 PM
பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை பத்திரிகையாளரும் யோகா குரு பாபா ராம்தேவுக்கு நெருக்கமானவருமான வேத் பிரதாப் வேதிக் சந்தித்த விவகாரத்தால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் இரண்டாவது நாளாக கடும் அமளியில் ஈடுபட்டனர்.
ஜமாத்-உத்-தவாவின் தலைவரும், மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியுமான ஹபீஸ் சயீத்தை கடந்த 2-ம் தேதி பாகிஸ்தானின் லாகூரில் வேத் பிரதாப் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியானது.
பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளரான யோகா குரு பாபா ராம்தேவுக்கு நெருக்கமானவர் வேத் பிரதாப் வேதிக். டெல்லியின் மூத்த பத்திரிகையாளரான வேதிக், பாஜகவின் பல மூத்த தலைவர்களுக்கு நெருக்கமானவர். இவர், ஹபீஸை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை அவரே சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, வேத் பிரதாப் வேதிக், மத்திய அரசின் அனுமதியுடன்தான் ஹபீஸை சந்திக்கச் சென்றாரா என்பது குறித்தும், இருவரும் பேசிய விவரங்கள் பற்றியும் தெரிவிக்க வேண்டும் என்றும், வேதிக்கை கைது செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர்.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று இரண்டாவது நாளாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மக்களவையில் விளக்கம் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், "இந்த விவகாரம் தொடர்பாக, அரசு கருத்துக் கூற வேண்டிய தேவையே இல்லை. வேதிக் மற்றும் சயீத் உடனான சந்திப்பை அரசு ஏற்பாடு செய்யவில்லை" என்றார்.
அதன்பின்னர், காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை நடத்த விடாமல் அமளியில் ஈடுப்பட்டனர். பின்னர், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், "இந்த விவகாரத்தை கொண்டு கேள்வி நேரத்தை முடக்குவது நியாயமில்லை" என்றார். இருப்பினும் தொடர் அமளி ஏற்பட்டதால், அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, மாநிலங்களவையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டபோது பேசிய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி, ""ஹபீஸ் சயீத் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதச் செயலில் ஈடுபட்டுள்ளார். பத்திரிகையாளர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளில் அரசு தலையிட முடியாது. இந்தச் சந்திப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.
தனிப்பட்ட நபர் ஒருவரின் நடவடிக்கையை அரசுடன் தொடர்புபடுத்துவது ஏற்கத்தக்கது அல்ல. இந்த விவகாரத்தில் இந்தியா, இந்திய அரசு, இந்திய அரசியல் கட்சிகள் என யார் ஒருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்றார் அருண் ஜேட்லி.
எனினும், இந்த விவகாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி, காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் வெகுவாக பாதித்தன.
இதனிடையே, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான பிரதாப் வேதிக், பயங்கரவாதி ஹபீஸ் சையீதை சந்திக்க, இஸ்லாமாபாதில் உள்ள > இந்திய தூதரகம் ஏற்பாடு செய்ததா? என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, 'பாகிஸ்தானில் உள்ள அமைதி ஆய்வு மையத்தின் அழைப்பின் பேரில், வேறு சில பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் நான் பாகிஸ்தான் சென்றிருந்தேன். அப்போது ஹபீஸை சந்தித்தேன். அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்தேன். பிரதமர் மோடி அல்லது வேறு எவருக்குமான தூதுவராக சந்திக்கவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்சினையை எழுப்புவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை' என்று வேதிக் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT